பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 57

என்பது குறள். இந்தக் கருத்து எந்த அளவு பொருந்தும்! ஆய்வோமே!

நாம் நமக்கென ஒரு வண்டி வாங்கிப் பாதை வழியே ஊர்ந்து செல்லும்போது, வழியில் ஒருவர் நம்மை நோக்கி ‘நீiர் வண்டிவாங்கி ஊர்ந்து செல்வது உமக்காக மட்டும் அன்று வழியில் தளர்ந்து காணப்படும் பிறருக்கும் வண்டியில் இடம் தந்து ஏற்றிக் கொண்டு செல்வதற்கே’’ என்று சொல்வாரேயானால், கேட்ட நமக்குத் தூக்கி வாரிப் போடும். நாம் மழைக்குக் குடைபிடித்துக் கொண்டு செல்லும்போது, நம்மைக் கண்ட ஒருவர் “நீவிர் குடை பிடித்துச் செல்வது உமக்காக மட்டும் இருக்கக் கூடாது; வழியில் குடையில்லாமையால் நனைந்து நடுங்கும் பிறரையும் குடைக்குள் கொள்ளும்வரை நுழைத்துத் தள்ளிக் கொண்டு போகவேண்டும்” என்று தெரிவிப்பாரேயானால் திடுக்கிடுவோம் நாம். ஏன்? அது உண்மைதானே? வண்டியும் குடையும் உள்ளவர்கட்கும், இல்லாவிட்டாலும் தம்மைத்தாமே சமாளித்துக் கொள்ளும் ஆற்றல் உடையவர் கட்கும் வண்டியுள்ளும் குடையுள்ளும் இடம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினால், ஒருவேளை அக்கருத்துப் பொருந்தாது என்று மொழியலாம். ஆனால், வண்டியும் குடையும் இல்லாமல், சமாளித்துக் கொள்ளவும் முடியாமல் உடல்நலங்குன்றி வழியில் வருந்தும் ஏழை எளியவர்கட்கு இடம் கொடுக்கலாம் அன்றோ? இதைத்தான் திருவள்ளுவர் குறளில் வேறு விதமாக எடுத்துக்காட்டியுள்ளார். நாம் வாழ்க்கை என்னும் பாதையில் குடும்பம் என்னும் வண்டி அல்லது குடையின் துணை கொண்டு வழி கடந்து