பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

"கள்ளுண்ணா போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு"

என்று கேட்கிறார். கள் குடிக்கப்போகும் தோழர்களே! குடித்துவிட்டால் எப்படியிருக்கும் உங்கள் நிலைமை என்பதை, குடித்தவர்கள் சோர்ந்து, தடுமாறி, தள்ளாடி, உளறி வழியும் நிலையைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டாமா? குடித்தவனைப் பார்த்து, குடிக்காக குடிகாரன், தானும் அப்படித்தானே ஆவோம், தன்னையும் பிறர் ஏளனம் செய்வார்களே! என்று எண்ணமாட்டானா? என்று வள்ளுவர் கள்ளுக்கடைக்குப் போய்த் துள்ளித் துடிக்கிறார். நீங்கள் கள்ளுக்கடைக்குப் போகாமலே குடித்துச் சீரழிவுபடும் மக்களை நினைத்துக் கொண்டாலே போதும்; குடிகாரராக மாட்டீர்கள்.

காதல் உள்ளம்

வள்ளுவர் காதலைப்பற்றி எவ்வாறு கூறுகிறார் என்பதைப் பாருங்கள். அவர் உள்ளம் உண்மையான காதலைப் பற்றித்தான் எண்ணுகிறது. காட்சியும் அளிக்கிறது. பெண்ணை இவர் பார்க்கிறார். ஆனால் பெண்ணோ அப்போது தான் வெகுவாக நிலத்தைப் பெருவிரலால் கீறிக் கொண்டு தரையை நோக்குகிறதாகப் பாவனை செய்கிறாள். அவர் பார்க்காதபோது அவள் கடைவிழியால் காண்கிறாள். ஒரு புன்னகை புரிகிறாள். இதை வள்ளுவர் வெகு அழகாக,

"யான் நோக்கும்காலை நிலநோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்"

என்று கூறுகிறார். அதோடு நிற்கவில்லை அவர். கள்ளையும் காதலையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். ஆராய்ச்சி செய்கிறார். முடிவைச் சொல்லுகிறார். கேளுங்கள் அதை,