பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

go பதிப்புரை பேராசிரியர் சுந்தர சண்முகனார் அவர்கள் தன்னுடைய 26-ஆம் அகவை தொடங்கி திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தவர். 1947,1948- ஆம் ஆண்டுகளில் "திருக்குறள் தெளிவுரை", "திருக்குறள் தெளிவு" என்ற பெயர்களில் குறள்களுக்கு விளக்கவுரை எழுதி வெளியிட்டார். 1958, 1959-ஆம் ஆண்டுகளில் "தெவிட்டாத திருக்குறள்" என்ற தன்னுடைய இதழ்மூலமாகத் திருக்குறளின் முப்பால்களிலிருந்தும் குறள்களைத் தெரிவுசெய்து ஆராய்ச்சி உரைகள் எழுதி வெளியிட்டு வந்தார்கள். தற்போது தங்கள் திருக்கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் "வள்ளுவர் கண்ட மனையறம்" என்னும் இந்நூல் 1957-ஆம் ஆண்டு இதே தலைப்பில் சிறிய வெளியீடாக ஒரு திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தற்போது அச்சிறிய வெளியீடு ஒரு நூலாக உருமாற்றம் செய்யப்பட்டு அதே தலைப்பில் வெளிவருகின்றது. பேராசிரியர் சுந்தர சண்முகனார் திருக்குறளின் முத்தான மூன்று அதிகாரங்களான "இல்வாழ்க்கை", "வாழ்க்கைத்துணைநலம்" மற்றும் "மக்கட்பேறு" ஆகியவற்றுள் அடங்கியுள்ள குறள்களுக்கு எழுதிய ஆய்வுரைகள் தொகுக்கப்பட்ட ஒரு புதிய நூலாக இந்நூல் வெளியிடப்படுகின்றது. "ஆராய்ச்சி அறிஞர்" என்று தமிழ் கூறும் நல்லுலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பேராசிரியரின் ஆய்வு முத்திரைகள் இந்நூலில் பல இடங்களில் பளிச்சிடுகின்றன. இந்நூல் வெளிவரத் தூண்டுகோலாக இருந்து தன் பொருட்செலவில் நூலினை வெளியிட்ட பேராசிரியர் சுந்தர சண்முகனார் அறக்கட்டளையின் தலைவர் உயர்திரு குமரேச திருநீலகண்டன் அவர்களுக்கு எங்களின் நன்றியினைக் காணிக்கையாக்குகிறோம். நூலினை சிறந்த முறையில் அழகுற அச்சிட்டுத் தந்த புதுச்சேரி கம்பன் மறுதோன்றி அச்சகத்தாருக்கும் எங்களின் நனி நன்றி உரித்தாகுக. பேராசிரியரின் நூல்களுக்குப் பேராதரவு தந்துவரும் அன்பர்கள் இந்நூலினையும் ஆதரித்திட வேண்டுகிறோம். புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம் புதுச்சேரி-1 26,04.2004, (v)