பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகவும், இனிது -இனிமை உடையதாம். (ஏ-ஈற்றசை) இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மன. உரை) இனிமை உடைத்தாகிய அமிழ்தினும் மிக இனிது; தம்முடைய மக்கள் சிறு கையாலே அளையப்பட்ட கூழ். (பரி. உரை) சுவையான் அமிழ்தத்தினும் மிக இனிமை யுடைத்து, தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு. தெளிவுரை) தம்பிள்ளைகள் சிறுகைகளால் துழவிப்பிசைந்த உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தினும் மிக இனிக்கும். (ஆராய்ச்சி உரை) ஒருவர் உண்ணும்போது அவ்வுணவில் பிறர் வந்து கையை இட்டுப் பிசைந்து சிதைப்பாரேயானால் உண்ணுபவர்க்குப் பிடிக்காது. ஆனால், அவருடைய சிறு குழந்தை வந்து உணவில் கையை இட்டுப்பிசைந்து வாரி இறைக்குமேயானால் அவ்வுணவு சுவையில் மிகுந்த அமிழ்தத்தைக் காட்டிலும் அவர்க்கு இனிக்கும் என்பது உலகத்தில் உள்ள உண்மைதானே! 'பல்வகைச் செல்வங்களைப் படைத்துப் பலரோடு உண்ணக்கூடிய பெருஞ் செல்வராயினும் சரியே. குறு குறுவெனத் தளர்நடை நடந்தும், சிறிய கையை நீட்டி உணவில் இட்டும், தொட்டும், கெளவியும், துழாவியும், உடம்பின் மேலே வாரி இறைத்தும் மனத்தை ம்யக்குகின்ற மக்களைப் பெறாதோர்க்கு வாழ்நாளில் பயன் ஒன்றும் இல்லை" என்னும் கருத்துடைய செய்யுள் ஒன்று. பழந்தமிழ்ச் சங்க நூலாகிய புறநானூற்றில் உள்ளது. அது வருமாறு: "படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெரும் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டியும் இட்டும் தொட்டும் கெளவியும் துழந்தும் 62 பேரா. சுந்தர சண்முகனார்