உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

43

 கவியரசர் முடியரசன்


                        பொது நூல்

ஏசு பெருமானும் ஏத்தும் முகம்மதுவும் பேசும் உலகப் பெருநெறியின் தத்துவமும், போதி முனிவன் புகன்றனவும், மாவீரர் ஓதி உணர்த்தும் உயர்ந்த அருள்நெறியும், நெஞ்சைக் கனிவிக்கும் நேர்மைமிகும் ஆத்திகமும், நெஞ்சத் துணிவுரைக்கும் நேரில்லா நாத்திகமும், என்றுவரும் என்றுவரும் என்றே எதிர்நோக்கி நின்றுலகம் நோக்கும் நிலைத்த சமத்துவமும், எல்லாப் பொருளும் இதன்பால் உளவென்று நல்லோர் புகழ்ந்துரைத்த நல்ல திருமறைநூல்; சாதி கடந்து சமயத்திற் கப்பால்நின் றோதும் உயரறநூல், ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பொல்லா அரசியற்குப் போகாத் தனிப்பெருநூல்; எல்லாரும் ஏற்கும் இயல்புடைய நம்குறள்நூல், சாதிச் சழக்கும், சமயப் பிணக்குகளும், மோதிக் கெடுக்கும் முரண்பாட் டரசியலும் வள்ளுவன்பாற் சேர்க்காமல் வாழ்க்கைத் துணைநூலை உள்ளுவோம் கைக்கொள்வோம் ஒர்ந்து.