பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


வியல், அறிவியல், கலை ஆகிய பல துறைகள் மக்களின் காலத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. 'இரவே இன்றி நாள் முழுதும் பகற்பொழுதாக இருக்கக்கூடாதா?' என்று சிலர் ஏங்குகின்றனர். 'ஒரு நாளைக்கு நாற்பத்தெட்டு மணி நேரம் இருந்தால் என்ன?' என்று எண்ணுவோரும் உண்டு. ஒரு செயற்கைச் சூரியனைக் கண்டு பிடித்து, இந்நிலவுலகில் படியும் இருளை ஒரேயடியாக நீக்குவதற்கு அறிவியல் கலைஞர்கள் முயற்சி செய்தாலும் செய்யலாம். பகலை இரவாகவும், இரவைப் பகலாகவும் மாற்றிக்கொண்டு செயற்கை வாழ்வு வாழும் பாட்டாளிகளை ஆலைகள் (Factories) நிறைந்த பெரு நகரங்களில் காணலாம்.

வள்ளுவப் பெருமான் காலத்தின் அருமையைக் 'காலமறிதல்' என்னும் அதிகாரத்தில் விரித்துரைக்கிறார்.

"பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு"

என்ற குறளில், 'பருவத்தோடொட்ட ஒழுகல்' என்னும் தொடருக்குக் 'காலத்தோடு பொருந்த வினை செய்தொழுகல்' என்று பொருள் கூறுகிறார் பரிமேலழகர். மேலும், 'காலத்தோடு பொருந்துதல் காலந்தப்பாமற் செய்தல்' என்று பொருள் விரிக்கிறார். காலமறிந்து ஏற்ற கருவிகளுடன் செய்தால், செய்தற்கரிய வினைகளென்று சொல்லப்படுவன எதுவுமில்லை என்பது வள்ளுவர் கொள்கை. அக்குறள் பின்வருமாறு: