பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


"ஒருவரிடத்துக் கட்டுப்பட்டுக் கிடக்கும் அன்பைப் பின்னை இருவரிடத்தும், பின்னைச் சில உயிர்களிடத்தும், பின்னைப் பல உயிர்களிடத்தும், முடிவில் எல்லா உயிர்களிடத்தும் பரப்பும் தன்மையுடையது இல்லறம். காந்தியடிகள் பால் கட்டுப்பட்டிருந்த அன்பு, முறைமுறையே கஸ்தூரிபாய் வழியும், அவர்கள் மக்கள் வழியும் வளர்ந்து, எல்லா உயிர்களிடையும் ஊடுருவிப் பாய்ந்து, அருள் வெள்ளமாய் ஓடியது. காந்தியடிகள் தமக்கென்றா வாழ்ந்தார்? இல்லை. உலகுய்ய உழைக்கும் வாழ்வாக வன்றோ அவர் வாழ்வு இலங்கியது! இப்பேற்றை அவர்க்கு வழங்கியது எது? இல்லறமே. காந்தியடிகள் இல்லற நெறி நில்லாது. வேறு வழி நின்றிருப்பாராயின், அவர் வாழ்வு 'தன்னல' வாழ்வாக முடிந்திருக்கும். ஆதலால் ஒழுங்குபட்ட இல்லறமே வாழ்க்கைக்கு வேண்டற்பாலது" என்று விளக்குகின்றார்.

தமிழ்த் தென்றலின் கூற்றுப்படி உலகமே காந்தி யடிகளின் குடும்பம். பிற உயிர்கள் பால் அவர் காட்டிய அன்பே, அவர் நடாத்திய இல்லறம். ஆனால் அவ்வில்லறமும் துறவுள்ளத்தோடு நடத்தப்பட்டது. கற்றைச் சடையையோ, காவி உடையையோ அவர் என்றும் போற்றினாரில்லை. இல்லறத்திலிருந்தே பற்றை அறுத்தார். பாமரர்களுக்கும் ஏழைகளுக்கும் செய்யும் தொண்டைப் பரம்பொருளுக்குச் செய்யும் தொண்டாகக் கருதினார். அவருக்கு வாழ்க்கைத் துணையாக வந்து வாய்த்த கஸ்தூரிபாயும், 'மனைத்தக்க மாண்-