பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

காந்தியடிகள் இளமையில் செய்த தவறுகளை ஒளிவு மறைவின்றி, ஒன்று விடாமல் தம் வாழ்க்கை வரலாற்றில் எழுதியிருக்கிறார். இப்பண்பு எதைக் காட்டுகிறது? வாய்மையில் அவர் கொண்ட பற்றையே காட்டுகிறது. வாய்மையில் பற்றற்றோர் தம் தவறுகளை மூடி மறைப்பர். பசுத்தோல் போர்த்த புலியாக மக்களிடையே உலவுவர். ஆனால் காந்தியடிகளோ, தவறு செய்த இளமைக் காலத்தில் கூட, வாய்மையின் பால் ஒரு பிடிப்புடன் வாழ்ந்தார்.

காந்தியடிகள் இராச கோட்டை உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்த ஆண்டு குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சி நடந்தது. அவ்வாண்டு திருவாளர் கைல்சு என்ற பள்ளித் தணிக்கையாளர் (Deputy Inspecter of Schools) வந்தார். அவர் ஒவ்வொரு வகுப்பையும் சோதனை செய்தார். காந்தியடிகளின் வகுப்புக்கும் வந்தார். ஐந்து ஆங்கிலச் சொற்களைச் சொல்லி எல்லா மாணவரையும் எழுதுமாறு பணித்தார். அவற்றில் ‘கெட்டில்’ (Kettle) என்ற சொல்லும் ஒன்று. அச்சொல்லை அடிகள் பிழைபட எழுதினார். அருகில் நின்று கொண்டிருந்த ஆசிரியர் இத்தவற்றை உணர்ந்தார். தம் செருப்புக் காலால் அடிகளின் பாதத்தை மிதித்து, அருகிலுள்ள மாணவனைப்பார்த்து எழுதுமாறு சைகை காட்டினார். ஆனால் காந்தியடிகள் அவ்வாறு செய்யவில்லை. மறுநாள் ஆசிரியர் வகுப்பிற்கு வந்ததும் காந்தியடிகளை நோக்கி, ‘நீ பெரிய முட்டாளடா. பக்கத்து மாணவனைப் பார்த்து எழுதுமாறு நான் பலமுறை உனக்குச் சாடை