பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

முறையும் பாராட்டற்குரியன. உலகில் மற்றப் பெரியோர்கள் வாய்மையைக் கடைப்பிடித்து ஒழுகிய முறைக்கும், காந்தியடிகள் கடைப்பிடித்து ஒழுகிய முறைக்கும் சிறிது வேறுபாடு உண்டு. மற்றப் பெரியோர்கள் பொய்யாமையையே வாய்மை என்னும் அறமாகக் கொண்டனர். ஆனால் அடிகளோ, தம் மனச் சாட்சியையே வாய்மை என்னும் அறமாகக் கொண்டார். தம் மனச்சாட்சி எவைகளின்பால் மாறுபடுகிறதோ, அவைகளையெல்லாம் பொய்மை எனக் கருதினார். தம் மனச்சாட்சிக்கு மாறாகச் செய்யும் ஒவ்வொரு செயலையும், வாய்மையிலிருந்து தவறுவதாகவே கருதினார். குறிப்பாக ஒரு மேற்கோள் கூறி அதை விளக்க விரும்புகிறேன்.

இளமையிலிருந்தே காந்தியடிகள் ஆடம்பரமாக உடையணிவதில் பெருவிருப்பம் கொண்டவர். இங்கிலாந்தில் தாம் மேற்கொண்ட ஆடம்பர வாழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘பம்பாயிலிருந்து நான் கொண்டுவந்த உடுப்புக்கள் ஆங்கில நாகரிகத்திற் கேற்றவையல்ல வெனக் கருதி, புதிய உடுப்புகள் வாங்கினேன். பத்தொன்பது ‘ஷில்லிங்’ கொடுத்துச் சிறந்த தொப்பியொன்று வாங்கினேன். அக்காலத்தில் அது மிகுந்த விலையாகும். அதுவும் போதாதென்று, இலண்டனில் நாகரிக வாழ்க்கைக்கு நிலைக்களமான ‘பாண்ட்’ தெருவில், மாலை வேளையில் தரிக்கும் உடுப்பு ஒன்றுக்குப் பத்துப் பவுன். தொலைத்தேன். அன்பு உள்ளம் படைத்த என் தமையனா-