பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. சமயம்

வள்ளுவர் எச்சமயத்தைச் சார்ந்தவர் என்ற ஆராய்ச்சி இன்னும் முற்றுப் பெறவில்லை. எல்லாச் சமயக் கொள்கைகளும் வள்ளுவர் வகுத்த வான் குறளில் படிந்திருக்கக் காணலாம். அதனாற்றான் ஒவ்வொரு சமயத்தானும் வள்ளுவரைத் தனக்குரிமையாக்கிக் கொள்ள முயல்கிறான். கொல்லாமை, இன்னா செய்யாமை, அவாவறுத்தல், புலான் மறுத்தல் முதலிய பேரறங்கள் யாவும், தம்முடைய சமயக் கொள்கைகளே என்றும், அவ்வறங்களை வற்புறுத்திக் கூறிய செந்நாப்புலவர் தம்முடைய சமயத்தைச் சார்ந்தவரே என்றும் பௌத்த, சமண சமயப் பெரியார்கள் வாதிடுகின்றனர். உரைகளில் தொன்மை சான்ற ‘மணக்குடவர் உரை’ சமண சமயச் சார்புடையது. அச்சமயக் கொள்கைகளே யாண்டும் அவ்வுரையில் வற்புறுத்திச் சொல்லப்படுகின்றன. அன்புடைமை, அருளுடைமை, புலான் மறுத்தல் முதலிய அறங்கள், சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகள். ‘அன்பே சிவம்’ என்றல்லவோ அச்சமயம் முழங்குகிறது. அவர்களும் குறளின்பால் சொந்தம் பாராட்டுவதற்கு உரிமையுடையவர்களே. பரிதியார் திருக்குறளுக்கு