பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

எழுதிய உரையில், சைவ மணம் கமழக் காணலாம்.

“தாமரைக் கண்ணன் உலகு”—என்று ‘புணர்ச்சி மகிழ்தல்’ என்ற அதிகாரத்தில் ஒரு குறளில் உள்ளது. ‘தாமரைக் கண்ணான் உலகு’ என்பதற்குச் ‘செங்கண்மால் உலகம்’ என்று பரிமேலழகரும், ‘இந்திரன் உலகு’ என்று மணக்குடவரும் உரை கூறுகின்றனர். ‘தாமரைக் கண்ணான் என்பது இந்திரனுக்குப் பெயரன்று’ என்று பரிமேலழகர் மறுத்துரைக்கிறார். இச் சொற்றொடரை உறுதியாகப் பிடித்துக் கொண்டு நிற்கின்றனர் வைணவப் பெரியார்கள். திருக்குறளில் எங்கும் வேறு கடவுளரின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. ‘தாமரைக் கண்ணான்’ தான் குறிப்பிடப்படுகிறான். ஆகையினால் வள்ளுவர் வைணவராகத்தான் இருக்கவேண்டும் என்று வாதிடுகின்றனர் வைணவப் புலவர்கள். வாதிடுவதோடு அமையாமல், ஒரு வைணவ அறிஞர் வள்ளுவத்திற்கு வைணவ மரபுப்படி உரையும் வகுத்துள்ளார். அந்நூலின் முகப்பில், திருமண் சார்த்திக்கொண்டு, வைணவக் கோலத்தோடு வள்ளுவர் பெருமான் காட்சியளிக்கிறார். அதே போல, சைவ சமயத்தார் வெளியிட்டுள்ள திருக்குறளின் முகப்பில், வள்ளுவர் வெந்த வெண்ணீறணிந்து விரிசடைக் கடவுளின் அடியவர் கோலத்தோடு விளங்குகிறார். சைவப் புலவர்கள் வள்ளுவரின் கடவுள் வாழ்த்துக் குறட்பாக்களுக்குத் தங்கள் சமயக் கருத்துப் புலப்படுமாறு உரை கூறுகின்றனர்.