பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

பௌத்தம், சமணம், சைவம், வைணவம் யாவும் நம் நாட்டில் தோன்றிய சமயங்கள், ஆனால் கடல் கடந்து வந்து, நம் கன்னித் தமிழகத்தில் குடியேறிய கிருத்தவமும் குறளின் பால் சொந்தம் பாராட்டுகிறது. கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலேயே சிரியக் கிருத்தவர் (Syrian Christians) தமிழகத்தில் போந்து, மேற்குக்கரைப் பகுதிகளில் தம் மதக் கொள்கைகளைப் பரப்பினர். அக்கொள்கைகளே திருக்குறளில் இடம் பெற்றுள்ளன என்று அவர்களும் கருதுகின்றனர். தமிழகத்தில் நெடுங்காலம் வாழ்ந்த பேரறிஞரும், திருக்குறள், நாலடியார், திருவாசகம் முதலிய அருநூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பெருந்தகையாளரும், தம் கல்லறையின் மீது ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று எழுதும்படி பணித்த சொல்லேருழவருமான ஆங்கிலப் பெருமகனார் போப், ‘திருக்குறள் ஏசுநாதர் அருளிய மலைப்பிரசங்கத்தின் எதிரொலி’ என்று எழுதிப் போந்தார். இனி இசுலாமியரும் திருக்குறளை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்ந்தால், குர்ஆன் கருத்துக்கள் அதில் தென்படாமல் போகா.

இவ்வாறு சமயப் போராட்டத்தில் வள்ளுவர் சிக்கித் தவித்தாலும், ஒரு சிறந்த உண்மை நம் உள்ளத்திற்குப் புலப்படுகிறது. ‘வள்ளுவர் எல்லாச் சமயத்தார்க்கும் உரியவர்’ என்பதுதான் அந்த மேலான உண்மை. இவ்வுண்மையைப் பண்டைக் காலத்தில் வாழ்ந்த கல்லாடர் என்ற புலவர் பெருந்தகையும் பின்வருமாறு எடுத்தியம்புகிறார் :