பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனால் பகவத்கீதையோடு அடிகளுக்கு ஈடுபாடு கிடையாது. எனவே, அடிகளையும் தம்முடன் கீதை படிக்க வருமாறு அந்த நண்பர்கள் அழைத்தார்கள். வெளி நாட்டு மக்கள், தம் தாய் நாட்டு நூலான கீதையைப் படிக்க அழைத்தபோது, அடிகள் உண்மையாகவே வெட்கமடைந்தார்; பிறகு, ‘சர் எட்வின் ஆர்னால்டு’ என்பவரால் எழுதப்பட்ட கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்தார்; பின்னர்க் கீதையின் சமஸ்கிருத மூலத்தையும், குஜராத்தி மூலத்தையும் படிக்கத். தொடங்கினார்; அதிலிருந்து கீதை அடிகளின் வாழ்வோடு பிரிக்க முடியாதபடி ஒன்றி விட்டது.

மேற்கூறிய நண்பர்கள் இருவரும் காந்தியடிகளையும் பிரம்மஞான சங்கத்தில் சேருமாறு வற்புறுத்தினார்கள். ‘என்னுடைய சொந்தச் சமயத்தைப் பற்றியே நான் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளாதிருக்கையில், பிற சமயக் கழகம் எதிலும் சேரவிரும்பவில்லை’ என்று அடிகள் மறுத்துக் கூறிவிட்டார்; பிறகு பிரம்ம ஞான சங்க நூல்களையும் இந்து சமய நூல்களையும் படித்தார். இந்து சமயத்தில் குருட்டு நம்பிக்கைகளே மிகுந்திருக்கின்றன வென்று, பாதிரிமார்களின் பிரசாரத்தினால் ஏற்பட்ட தவறான கொள்கை அடிகளின் உள்ளத்திலிருந்து மறைந்தது.

ஒரு நாள் மான்செஸ்டரிலிருந்து வந்த உத்தமக் கிருத்தவர் ஒருவரை அடிகள் சந்தித்தார். அதுவும் இலண்டன் மாநகரிலிருந்த சைவ உணவு விடுதியில் சந்தித்தார். கிருத்தவ சமயத்தைப்