பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

டிருந்த வெள்ளைக்கார நாவிதன், ‘கருப்பனாகிய உனக்கு முடிவெட்ட முடியாது’ என்றுகூறி மறுத்து விட்டான். உடனே, தாமே ஏன் முடி வெட்டிக் கொள்ளக்கூடாது ? என்ற எண்ணம் அடிகளுக்கு ஏற்பட்டது. அதிலிருந்து தாமே முடிவெட்டிக் கொண்டதோடு, தம் குழந்தைகளுக்கும் வெட்டி விட்டார். முதலில் அடிகளின் இச்செயலைக் கண்டு நண்பர்கள் நகையாடினர். ஒருநாள் வழக்கு மன்றத்தில் காந்தியடிகள் அமர்ந்திருந்தபோது, அவருடைய நண்பர்கள் என்ன காந்தி! உமது மயிருக்கு என்ன ஆபத்து வந்தது : எலி கடித்துவிட்டதா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டனர். ஆனால் அடிகள் அதைப் பொருட்படுத்தவில்லை. கொஞ்ச நாளைக்குள் தலைமயிரைத் தாமே வெட்டிக் கொள்வதிலும் நல்ல திறமை பெற்றார்.

ஒரு சமயம் திருவாளர் கோகலே தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார். கோகலேயிடம், அவருடைய குருவான இரானடே அளித்த மேல் துண்டு ஒன்று இருந்தது. அது சரிகைக்கரையிட்ட விலைமதிப்புள்ள துண்டு. சிறப்பான நிகழ்ச்சிகளின் போது மட்டும், கோகலே அத்துண்டை அணிவது வழக்கம். தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் இந்தியர்கள் கோகலேவுக்கு ஒரு விருந்து நடத்தினர். அதற்கு மேற்படி துண்டை அணிந்து கொண்டு போக கோகலே விரும்பினார். ஆனால் அத்துண்டு மடிப்புக் கலைந்து போயிருந்தது. இது குறித்துக் கோகலே அடைந்த கவலையைக் காந்தியடிகள் தெரிந்து கொண்டு, தம்