பக்கம்:வழிகாட்டி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - வழிகாட்டி

பூசாரியும் குறமகளும் வழிபடக் கோயிலிலே எழுந் தருளியிருப்பான். ஆவேச ரூபத்திலே வருவான். ஊரூர் தோறும் விழா நடத்தும் இடங்களிலே இருப்பான். பக்தர் கொண்டாடும் இடத்தில் நிலவுவான். இயற்கை யெழில் தவழும் காட்டிலும், ஆற்றிலும், ஆற்றிடைக் குறையிலும், கடம்பமரத்திலும் எழுந்தருளியிருப்பான். செயற்கையெழில் திகழும் காவிலும் குளத்திலும் பிற இடங்களிலும் அவன் சாந்நித்தியம் உண்டு. மக்கள் கூடும் சதுக்கத்திலும் சந்நிதியிலும் மன்றத்திலும் பொதியிலி லும் இருப்பான். தறியை நட்டு வழிபடும் இடத்திலும் அவன் எழுந்தருள்வான்.

அவனை வழிபடுவோர் பலவகைப்படுவர். நாகரிகம் அற்றவரென்று பிறர் கருதும் குறவர் முதல், மும்மூர்த்தி கள் வரையில் அவனடியார்களே. ஒவ்வொரு திறத் தினரும் அன்போடே வழிபட்டால் அவர்களுக்கு ஏற்ற வண்ணம் அருள்செய்யும் வள்ளல் அவன். மலையில் வாழும் பூசாரி மாலை கட்டி ஆட்டை அறுத்து வெறியாடி வழிபடுகிறான். குறவர்கள் கள்ளைக் குடித்துச் சந்தனம் அணிந்து தொண்டகப் பறையை முழக்கிக் குரவையாடி வழிபடுகிறார்கள்.

குறமகளாகிய தேவராட்டி கோழிக்கொடியை நட்டு நெய்யும் அரைத்த கடுகும் அப்பி மலரும் பொரியும் இரத்தத்தோடு கலந்த அரிசியும் சிதறி ஆட்டை அறுத்துத் தானியங்களை வைத்துத் தூபங் காட்டிக் குறிஞ்சிப் பண்ணைப் பாடிப் பூசிக்கிறாள். முருகன் அவ்விடங் களில் குறிஞ்சிக் கிழவனாக இருந்து அவர்கள் வழி பாட்டை ஏற்றருளுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/26&oldid=643580" இலிருந்து மீள்விக்கப்பட்டது