பக்கம்:வழிப்போக்கன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

“சாம்பசிவத்தின் முடிவை என்னால் நம்பவே முடியவில்லையே! அவருக்கு என்ன உடம்புக்கு?...”

“திடீரென்று ஒரு நாள் ஒரு மாதிரி வலி ஏற்பட்டு உடம்பைக் கோணலாக இழுத்துத் தூக்கித் தூக்கிப் போட்டது. எத்தனையோ டாக்டர்களை அழைத்து வந்து காட்டினோம். எவ்வளவோ வைத்தியம் செய்தோம். ஒன்றும் பயன் இல்லாமல் போய்விட்டது. எமன் அவர் வாழ்வை முடித்துக்கொண்டு போய்விட்டான். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். இப்போது தாத்தா உயிரோடு பிழைத்தெழுந்திருக்க வேண்டுமே என்று கவலையாயிருக்கிறது...சுந்தர்! நான் ரொம்ப துரதிருஷ்டசாலி; இல்லையென்றால் உங்களை மணந்துகொண்டு சந்தோஷமாக வாழ்ந்திருப்பேன் அல்லவா?”

நீண்ட பெருமூச்சு விட்டாள் அவள்.

சுந்தரின் இதயம் படபட வென்று அடித்துக் கொண்டது. சகுந்தலாவின் அழகு அவனைக் கவர்ந்து வசீகரித்தது. அவள் இவ்வளவு அழகாக, சவுந்தரிய தேவதையாக மாறிப் போயிருப்பாள் என்று அவன் எண்ணவேயில்லை.

“உம்!......”

அவன் பெருமூச்செறிந்தான்.

“சுந்தர்! இதோ ஒரு நொடியில் முகம் கழுவிக்கொண்டு வந்துவிடுகிறேன்” என்று கூறிய சகுந்தலா கையில் ஒரு டவலையும் சோப்புப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு ஸ்நான அறைக்குள் சென்றாள்.

“சுந்தர்! இது என்ன பார்த்தீர்களா?” என்று லேசாகப் புன்னகை பூத்தபடியே தன் கையிலிருந்த சோப்புப் பெட்டியைக் காட்டிக் கேட்டாள் அவள்.

“நான் ஆற்காட்டில் மறந்து வைத்துவிட்ட சோப்புப் பெட்டி!” என்றான் அவன். அவள் புன்முறுவல் பூத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/105&oldid=1322851" இலிருந்து மீள்விக்கப்பட்டது