பக்கம்:வழிப்போக்கன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

பதில் கூறவில்லை அவள்.

"சகுந்தலா சொல்லமாட்டாயா?”

பொங்கிய துக்கத்தை அடக்கிக் கொண்டு பேச முற்பட்டாள் சகுந்தலா. வார்த்தைகள் துக்கத்தில் மூழ்கி வெளிவந்தன. "அவர் இறந்து ஒன்பது மாதம் ஆகிறது. தாத்தா வேலூர் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார். ஒரு மாதமாக அவருக்கு டைபாய்டு ஜூரம். அவரைத்தான் பார்த்துவிட்டு வருகிறேன். சுந்தர்! உங்களைப் பிரிந்த பிறகு என் வாழ்வே சீர்குலைந்து விட்டது! சோதனைக்கு மேல் சோதனையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நானும் தாத்தாவும் ஆற்காட்டுக்கே திரும்பி வந்துவிட்டோம். நான் தான் இந்த ஒரு மாதமாக வேலூருக்கும் ஆற்காட்டுக்கும் அலைந்து கொண்டிருக்கிறேன். வாருங்கள் சுந்தரம், மேலே ரிடயரிங் ரூமில்தான் தங்கியிருக்கிறேன். உங்களோடு எவ்வளவோ பேசியாக வேண்டும். வாருங்கள் போகலாம்" என்று அழைத்தாள் அவள்.

சுந்தர் அந்தப் பெட்டிவை எடுத்துக்கொண்டு அவள் பின்னோடு நடந்தான்.

"ஆமாம்; தாங்கள் எப்போது சிறையிலிருந்து வந்தீர்கள்? காமு சவுக்கியமாயிருக்கிருளா?" என்று கேட்டாள் சகுந்தலா.

"அவளுக்கு டி. பி. பெருந்துறை ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறாள். அவளைப் பார்க்கத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். சிறையிலிருந்து வந்தது முதல் இன்னும் ஒரு நல்ல சேதியைக் கூடக் கேள்விப்படவில்லை நான். இதையெல்லாம் பார்க்கும்போது சிறையிலிருந்து ஏன் வந்தோம் என்று கூடத் தோன்றுகிறது..."

சகுந்தலா அறையைத் திறந்து, “உள்ளே வாருங்கள்! இன்று நீங்களும் இங்கேயே தங்கியிருக்கலாம். உங்களைப் பார்த்தது எனக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கிறது தெரியுமா? என் துன்பங்கள் எல்லாம் தீர்ந்து விட்டன போலிருக்கிறது......" அவள் பெருமூச்சு விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/104&oldid=1315373" இலிருந்து மீள்விக்கப்பட்டது