பக்கம்:வழிப்போக்கன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

பிளாட்பாரத்தில் அதிக சந்தடி இல்லை. ரயில்வே போலீசார் இருவர் தொப்பியைக் கழற்றிப் பெஞ்சுமீது வைத்து விட்டு, உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்களைக் கண்டதும் சுந்தரத்தின் நெஞ்சு 'திக் திக்' கென்று அடித்துக் கொண்டது. அவர்கள் இருந்த பக்கமே திரும்பிப் பார்க்காமல் பிளாட்பாரத்தின் மற்றொரு கோடிக்குப்போய் அங்கிருந்த பெஞ்சுமீது உட்கார்ந்து கொண்டான்.

இந்தச் சமயம் சற்றுத் தொலைவில் கையில் கூஜாவுடன் யாரோ ஒரு பெண் அவனே நோக்கி வந்து கொண்டிருந்தாள். யார் அவள்? கண்ணைப் பறிக்கும் அவளுடைய அழகைக் கண்ட போது, “ஆ! என்ன அழகு!” என்று தனக்குள்ளாகவே வியந்து கொண்டான் சுந்தரம்.

அவள் சுந்தரையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘முன்பின் தெரியாதவள் தன்னை ஏன் அப்படிப் பார்க்கிறாள்?’ என்று யோசித்தான் சுந்தரம். இதற்குள் அவள் சுந்தரத்தின் அருகிலேயே நெருங்கி வந்துவிட்டாள்.

“சுந்தர்!” அவள் கண்கள் வியப்பினால் மலர்ந்தன. உதடுகள் முறுவலித்தன. கன்னங்களில் குழி விழுந்தன.

'யார்? சகுந்தலாவா அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கிறாளே!' அவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன, அப்படிப் பார்க்கிறீர்கள்? என்னைத் தெரிய வில்லையா?...” என்று கேட்டாள் சகுந்தலா.

"நீயா நீ இங்கே எங்கே வந்தாய்? டில்லியில் இருப்பதாக அல்லவா கேள்விப்பட்டேன்?"

அவள் பதில் கூறவில்லை. கண்களிலிருந்து பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டவளாய், “என் விதி” என்றாள்.

“ஏன் அழுகிறாய் சகுந்தலா: ஏதோ மாதிரி இருக்கிறாயே! உனக்கு என்ன? உன் கணவர் சாம்பசிவம் எங்கே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/103&oldid=1315370" இலிருந்து மீள்விக்கப்பட்டது