பக்கம்:வழிப்போக்கன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


அன்றிரவு சுந்தரத்திற்குத் தூக்கம் பிடிக்கவில்லை. "காமு காமு!" என்று இரவெல்லாம் வாய் பிதற்றிக் கொண்டே படுத்திருந்தான். "பொழுது எப்போது விடியப் போகிறது?" என்று காத்திருந்தவன், காலையில் பத்து மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிவிட்டான்.

பெருந்துறை போவதற்கு இராத்திரிதான் ரயில். எனவே, பஸ் ஏறி முதலில் நேராக சித்துாருக்குப் போய்ச் சேர்ந்தான். சித்துர் காட்டில் குறவன் குறிப்பிட்ட இடத்துக்குப் போய் அந்த நகைப் பெட்டியைத் தோண்டி எடுத்தான். சிறிய தகரப் பெட்டிதான். திறந்து பார்த்தபோது, என்ன விந்தை! தங்க ஒட்டியாணம், வைர அட்டிகை, வங்கி, வளையல்கள் இன்னும் என்னென்னவோ அதற்குள் இருந்தன. மதிப்பு பத்தாயிரத்துக்குக் குறைவில்லே!

இவ்வளவும் யாருடைய நகைகளோ? எந்த வீட்டில் கொள்ளை அடித்தானே? அந்தத் திருட்டுச் சொத்தை விவரமாக ஆராய்ந்து பார்ப்பதற்கே சுந்தரத்துக்கு உள்ளம் கூசியது. அந்தப் பெட்டியை ஒரு துணியில் வைத்து மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு வேகமாக நடந்தான்.

நானும் இப்போது ஒரு திருடன்தான்! இந்தத் திருட்டு நகைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்துப் போவது பெரும் திருட்டுக் குற்றம்தானே? என்று எண்ணிக் கொண்டான்.

பின்னல் பஸ் வரும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். வேலூர் போகும்பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்தப் பஸ்சை நிறுத்தி அதில் ஏறிக்கொண்டான்.

வேலூருக்குப் போய், அங்கிருந்து காட்பாடி ஸ்டேஷனை அடைவதற்குள் மணி ஏழுக்குமேல் ஆகிவிடவே, அதற்குள் நன்கு இருட்டிவிட்டது. ஸ்டேஷனிலேயே சாப்பிட்டுவிட்டு இரவு மூன்று மணிக்கு வரும் ரயிலில் பெருந்துறைக்குப் போவது என்று முடிவு செய்து கொண்டான். அந்தப்பெட்டி அவனுக்குப் பெரும் பாரமாக இருந்தது. அதைக் கையில் வைத்துக்கொண்டு இருப்பதற்கே அவனுக்குப் பிடிக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/102&oldid=1313624" இலிருந்து மீள்விக்கப்பட்டது