பக்கம்:வழிப்போக்கன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

இப்போது அந்த ஊரில்தான் இருக்கிறார்கள். உன்னைக் காணவேண்டும் என்பதற்காகவே அவள் உயிரைத் தன் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள். பிழைத்தால் புனர் ஜன்மம்தான் என்றாள் அவன் தாய்.

சுந்தரம் தன் தலையை இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இடிந்துபோய், அப்படியே சிலையாகக் கீழே உட்கார்ந்துவிட்டான்.

"காமு! என்னால் அல்லவா உனக்கு இத்தனை துன்பங்களும்..." கேவி அழுதுவிட்டான் அவன்.

"சுந்தரம், நாளைக்கே நீ புறப்பட்டுப் போ. உன்னைப் பார்த்தாலாவது ஒருவேளை அவள் உடம்பு குணமடையலாம்" என்றாள் பார்வதி.

"அவனுக்கு முதலில் காப்பியைக் கொண்டுவந்து கொடு. அப்புறம் மற்ற சங்கதிகளைப் பேசிக் கொள்ளலாம்' என்று மனைவியைக் கடிந்துகொண்ட கங்காதரய்யர், “ஏண்டாப்பா ஒரு கார்டு போடக்கூடாதா எனக்கு? சொல்லாமல் கொள்ளாமல் ஜெயிலுக்குப் போய்விட்டாயே, பெற்ற வயிறு எவ்வளவு வேதனைப்பட்டது தெரியுமா? போகிறது; இந்தமட்டில் நல்ல படியாகத் திரும்பி வந்தாயே அதுவே போதும். இத்தனை காலமும் சர்மாதான் எங்களைக் காப்பாற்றினர். அவர் உதவி இல்லையென்றால் நாங்கள் தத்தளித்துப் போயிருப்போம்" என்றார் கங்காதரய்யர்

நன்றி உணர்ச்சியுடன் சர்மாவை நினைத்துக் கண்ணிர்விட்டான் சுந்தரம்.

"நம் குடும்பத்தின் தெய்வம் அவர், இப்போது சர்மா எங்கே இருக்கிறார் அப்பா?"

"டில்லியில் இருப்பதாகக் கேள்வி. ஆற்காட்டு மண்டி யிலிருந்து எனக்கு அரிசியும், பணமும் மாதம் தவறா மல் வந்து கொண்டிருக்கிறது' என்றார் கங்காதரய்யர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/101&oldid=1313622" இலிருந்து மீள்விக்கப்பட்டது