பக்கம்:வழிப்போக்கன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

கோயிலை வலமாக வந்தான். அந்த விளாமரத்தின் கீழே இருந்த அகலமான பாறைமீது போய் அமர்ந்து யோசிக்கலானான்.

‘டொக்’கென விழந்த விளாம்பழம் ஒன்று அவன் சிந்தனையைக் கலைத்தது. அதை எடுத்துப் பார்த்தான். நன்றாகக் கனிந்து உள்ளுக்குள்ளேயே பற்றற்றுப் பக்குவப்பட்டிருந்தது அப்பழம்.

அந்த விளாம்பழத்தைக் கண்டதுமே சுந்தரத்துக்கு அவளுடைய நினைவு தோன்றிவிட்டது. தன் இளம் பிராயத்தில், இதே பிள்ளையார் கோயில் எதிரில், இதே விளாமரத்தடியில் அவளுடன் சிரித்து விளையாடி மகிழ்ந்த நாட்களெல்லாம் அவன் நினைவில் பசுமையாகத் தோன்றத் தொடங்கின.

“டேய், சுந்தர்! எனக்கு ஒரு பழம் பறித்துப் போடுடா!” சகுந்தலா கெஞ்சினாள்.

“போட முடியாது, போடி!”— இது விளாமரத்தின் மீது உட்கார்ந்திருந்த சுந்தரின் மறுப்பு.

“இரு, இரு; என் தாத்தாவிடம் போய்ச் சொல்கிறேன், சுந்தர் ஆற்றங்கரை விளாமரத்தில் ஏறி உட்கார்ந்திருக்கிறான் என்று!”

சுந்தரின் வயிற்றில் ‘பகீர்’ என்றது. பாடம் படிக்காமல் அவன் ஆற்றங்கரைக்கு வந்திருக்கும் விஷயம் சகுந்தலாவின் தாத்தாவுக்குத் தெரிந்தால்?......

“ஐயோ வேண்டாமடி! உனக்கு வேண்டிய பழம் போடுகிறேன், இந்தா! ” பழம் நிறைந்த கிளையொன்றைப் பலமாக ஓர் உலுக்கு உலுக்கினான் அவன். அந்த உலுக்கலில் ‘டொக், டொக்’ கென்று இரண்டு கீழே விழுந்தன.

அவற்றைத் தொடர்ந்து சுந்தரம் குதித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/11&oldid=1306839" இலிருந்து மீள்விக்கப்பட்டது