பக்கம்:வழிப்போக்கன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அதற்கு ஆசீர்வாதமாக வந்த பணத்தைத் தான் எடுத்துப் போக வேண்டியிருக்கிறதே! என்பதை நினைக்கும் போது அவனுக்குச் சங்கடமாயிருந்தது. மனைவி கொடுத்த அந்தப் பொட்டணத்தை அப்படியே மடித்துத் தன் கைப் பைக்குள் வைத்துக் கொண்டான்.

குழந்தையைக் கொண்டு வந்து அவனுக்கு முன்னால் நீட்டினாள் அவன் மனைவி. அந்தப் பச்சை மண்ணின் சிவந்த உதடுகளைத் தன் விரலால் தொட்டுப் பார்த்தான் சுந்தரம்.

"அப்பாவைச் சீக்கிரம் வந்து அழைத்துப் போகச் சொல்லுடா, கண்ணு!" என்றாள் அந்தப் பேதை. மாமனாரிடமும் மாமியாரிடமும் சொல்லிக்கொண்டு சுந்தரம் சரே லெனக் கிளம்பிவிட்டான்.

பொழுது சாய்ந்து, மேற்றிசை வானமெங்கும் மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி கொட்டியது போல் இந்திர ஜாலம் நடந்து கொண்டிருந்தது. எந்தச் சைத்திரிகன் தீட்டிய வண்ண ஜாலமோ அது!

பாலாற்றுக்குள் சரிவாக இறங்கும் பாதைக்கருகே வந்து விட்டான் அவன். ஊர்ப் பெண்கள் தலையில் சும்மாடிட்டுப் பளபளக்கும் நீர்க்குடங்களில் ஊற்று நீர் சுமந்து சென்று கொண்டு இருந்தனர். தொலைவில் சிறு பிள்ளைகள் எக்களிப்புடன் கும்மாளமிட்டு விளையாடிக் கொண்டு இருந்தனர். ஆவினங்கள் கிண்கிணி ஓசை எழுப்பியவண்ணம் வீடு திரும்பிக்கொண்டு இருந்தன.

ஆற்று மணலில் தோண்டப் பெற்ற பளிங்கு போன்ற ஊற்றுச் சுழல்தான் நீண்டகாலமாகச் சுற்றுப்புற மக்களுக்குக் குடிதண்ணீர் வழங்கி வருகிறது.

அதன் கரையில் ஒரு பிள்ளையார் கோயில். அந்தக் கோயிலின் முன்னால் ஒரு விளாமரம். சுந்தரம், விநாயகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/10&oldid=1304702" இலிருந்து மீள்விக்கப்பட்டது