பக்கம்:வழிப்போக்கன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

"விடியற்காலம் மூன்று மணிக்கு எனக்கு ரயில், அதில் நான் பெருந்துறை போக வேண்டும்."

" இந்த மழையில் தாங்கள் என்னைத் தனியாக விட்டுப் போகக் கூடாது. நாளை இரவு பெருந்துறை போகலாம். காலையில் என்னோடு ஆற்காட்டுக்கு வாருங்கள்" என்றாள் சகுந்தலா.

"என் உயிரெல்லாம் பெருந்துறையில் இருக்கிறது. நாளைக்கே நான் காமுவைப் பார்த்தாக வேண்டும்" என்றான் சுந்தரம்.

"முதலில் இப்போது தூங்குங்கள். பொழுது விடியட்டும்" என்றாள் அவள்.

சுந்தருக்கு தூக்கம் வரவில்லை. திடீரென்று எங்கிருந்தோ 'கம்' மென்று வீசிய மல்லிகை மணம் அவனைக் கிறங்கச் செய்தது.

"இந்த மணம் எங்கிருந்து வருகிறது?" என்று புரியாமல் கேட்டான் அவன்.

"உங்கள் தலையணைக்கு அடியிலிருந்து"- என்றாள் சகுந்தலா.

"தலையணக்கு அடியிலிருந்தா...?"

"ஆம்; நீங்கள் சாப்பாடு கொண்டுவரப் போயிருந்த போது மீண்டும் அந்தப் பூக்காரக் கிழவி வந்தாள். நான் தான் ஒரு மல்லிகைச் சரத்தை வாங்கி உங்கள் தலையணைக்கு அடியில் வைத்தேன். தங்களுக்கு மல்லிகைப்பூ வாசனை என்றால் ரொம்பப் பிடிக்குமே!"

சுந்தர் எழுந்து தலையணக்குக் கீழிருந்த மல்லிகைச் சரத்தை எடுத்து அப்பால் வீசி எறிந்தான்.

"அதை ஏன் எறிந்து விட்டீர்கள்? உங்களுக்கு பிடிக்க வில்லையா?"

"கசங்கிய மலர்தானே? இனி எதற்கு அது?" என்றான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/115&oldid=1313639" இலிருந்து மீள்விக்கப்பட்டது