பக்கம்:வழிப்போக்கன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

"பாவம், களைத்துப் போயிருக்கிறீர்கள்!” என்றாள் சகுந்தலா.

"உடல் களைப்பு, உள்ளக் களைப்பு, உண்ட களைப்பு மூன்றும் சேர்ந்து என்னை வாட்டுகின்றன..."

"தாங்கள் இந்த பெஞ்சு மீதே படுத்துக்கொள்ளுங்கள். படுக்கைப் போட்டு வைத்திருக்கிறேன்" என்றாள் சகுந்தலா.

"நான் வராந்தாவில் படுத்துக் கொள்கிறேனே!" சுந்தரம் தயங்கினான்.

"வேண்டாம்; மழை பலமாக வரப்போகிறது. இங்கேயே படுத்துக் கொள்ளுங்கள்" என்றாள் அவள்.

சுந்தரம் படுத்துக் கொண்டான்.

சகுந்தலா அந்தப் பெஞ்சுக்கு அண்மையிலேயே இன்னொரு விரிப்பை எடுத்து உதறித் தரையில் போட்டுக் கொண்டு, நகைப் பெட்டியைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு படுத்தாள். படுத்தவள் உடனே எழுந்துபோய் அறைக் கதவைச் சாத்தித் தாளிட்டு விட்டு வந்தாள். அவ்வாறுசெய்தது அவளுக்கே ஏதோபோல் இருந்தது. "உனக்கும் பயமாக இருக்கிறது, நகைகளை வைத்துக்கொண்டு கதவைத் திறந்து வைக்க" என்று தன் செய்கைக்குச் சமாதானம் கூறுவதுபோல் உரக்கச் சொல்லிக் கொண்டாள் அவள்.

வானத்தில் வெகு நேரமாக உறுமிக் கொண்டிருந்த பெரிய இடி ஒன்று புக்கத்தில் நெருங்கி வந்து வெகு பயங்கரமாக முழங்கியது. அடுத்த கணம் அது இன்னும் பயங்கரமாக அண்டமே கிடுகிடுக்கும்படியாக இடித்து அதிர்ந்தது.

"இந்த இடி எங்கேயோ சமீபத்தில்தான் விழுந்திருக்க வேண்டும்" என்றான் சுந்தரம்.

"எனக்குப் பயமாக இருக்கிறது, சுந்தரம்!” என்று பெஞ்சுக்கு அருகில் நகர்ந்து வந்து படுத்துக் கொண்டாள் சகுந்தலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/114&oldid=1313638" இலிருந்து மீள்விக்கப்பட்டது