பக்கம்:வழிப்போக்கன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

“ஓகோ, தயாராக எடுத்து வைத்திருக்கிறாயா நீ!” அதை அவளிடம் இருந்து வாங்கி சுந்தரிடம் கொடுத்த சர்மா "உரக்கப் படியேன்” என்றார் சுந்தரைப் பார்த்து. அவன் படித்தான்.

“சகுந்தலாவுக்கு, உன் கடிதம் கிடைத்தது.

இங்கு நான் சவுக்கியம். உன் தாத்தா உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவும். சுந்தரின் மனைவிக்கு இப்போது எப்படி இருக்கிறது? சுந்தரம் இன்னும் பெருந்துறையில்தான் இருக்கிறானா?

உன் இஷ்டப்படியே இங்கே கல்கத்தாவில் சுந்தருக்கு உத்தியோகம் பார்த்து வைத்திருக்கிறேன். கல்கத்தா காலண்டர் மானுபாக்சரிங் கம்பெனியில் ஆர்ட்டிஸ்ட் வேலை. மாதச் சம்பளம் ஆரம்பத்தில் முன்னுாறு ரூபாய் கொடுப்பார்கள். நீ அனுப்பியிருந்த சில படங்களை அவர்களிடம் காண்பித்தேன். அந்தப் படத்தைக் கண்டு விட்டு அவர்கள் சுந்தரின் சித்திரத் திறமையை வெகுவாகப் புகழ்ந்தார்கள். உடனே வந்து வேலையை ஒப்புக் கொள்ளும்படி சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தகவலைச் சுந்தருக்குத் தெரியப்படுத்தவும். அவன் மனைவிக்கு உடம்பு பூரணமாக குணமாகிவிட்டிருக்கும் என நம்புகிறேன். அவர்கள் இரண்டு பேருமே இங்கு வந்துவிடலாம், அவர்களுக்கு வசதியான வீடும் பார்த்துவைத்திருக்கிறேன்.

இப்படிக்கு,
ராமநாதன்.”

“வேலையை ஒப்புக்கொள்ளும்படி அந்தக் கம்பெனியிலிருந்து நேற்று ஆர்டர்கூட வந்துவிட்டது. என்ன சொல்லுகிறாய், சுந்தரம்! கல்கத்தா போகிறாயா?” என்றார் சர்மா.

சுந்தரத்தின் உள்ளம் மகிழ்ச்சியினால் திக்கு முக்காடியது.

“போகிறேன்” என்றான் உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சியை அடக்கியவனாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/132&oldid=1322857" இலிருந்து மீள்விக்கப்பட்டது