பக்கம்:வழிப்போக்கன்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133


"உன் மனைவியையும் குழந்தையையும் கூடவே கையோடு அழைத்துக் கொண்டு நாளைக்கே புறப்படு. மாப்பிள்ளைக்கு நான் தந்தி கொடுத்துவிடுகிறேன்."

“சரி” என்று கூறிய சுந்தரம் உள்ளே போனான். சகுத்தலா அங்கே ஓரமாக புன்சிரிப்போடு நின்று கொண்டிருந்தாள்.

"உன் வேலைதானா இது?" என்று கேட்டான் சுந்தரம் அவளைப் பார்த்து. "இல்லை, இது உங்களுடைய வேலை!" என்றாள் அவள் சிரித்துக் கொண்டே.

"நீ ரொம்பப் பொல்லாதவள் சகுந்தலா! என்னிடம் எதையுமே சொல்லாமல் மனதிற்குள் மூடி வைத்திருந்தாயே..." என்றான் சுந்தரம்.

சகுந்தலா தலைகுனிந்தபடியே, "என்னை மன்னித்தேன் என்று சொல்லுங்கள். இப்போது என் மனதில் ஒன்றுமே கிடையாது. நான் களங்கமற்றவள். என் மனதில் இப்போது எந்த ஆசையும் இல்லை" என்றாள்.

காட்பாடியில் அன்றிரவு நடந்த நிகழ்ச்சிகள் சுந்தரத்தின் உள்ளத் திரையில் நிழலாடின. சகுந்தலா எதைக் குறித்து இப்போது இப்படிப் பேசுகிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டான்.

"சகுந்தலா! உங்களையெல்லாம் பிரிந்து நானும் அவ்வளவு தொலைவில் போய் வாழ வேண்டியிருக்கிறதே என்பதை நினைக்கும்போதுதான் வருத்தமாயிருக்கிறது..."

"காமுவின் உடம்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி எனக்குக் கடிதம் போட்டுக் கொண்டிருங்கள். உங்களை மறுபடியும் எப்போது பார்க்கப் போகிறேனோ..." பெருகி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் சகுந்தலா.

மறுநாள் சகுந்தலா விடியற்காலம் மூன்று மணிக்கே எழுந்து காமுவையும் எழுப்பி விட்டாள். காமுவுக்குத் தலை வாரிப் பின்னி, இரவே தொடுத்து வைத்திருந்த மல்லிகைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/133&oldid=1321862" இலிருந்து மீள்விக்கப்பட்டது