பக்கம்:வழிப்போக்கன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சுந்தரம் எந்நேரமும் மாடியிலேயே புத்தகமும் கையுமாகக் கிடத்தான். காரியமின்றி அவன் கீழே இறங்கி வரக் கூடாது; சகுந்தலாவும் மாடிப் பக்கம் செல்லக் கூடாது என்று சர்மாவின் உத்தரவு, உத்தரவுகூட அல்ல; அன்புக் கட்டளை!

விளையாட்டாகவே நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. இப்போதெல்லாம் சகுந்தலாவுக்குச் சுந்தரைக் கண்ணால் காண்பதே அரிதாகிவிட்டது. குளிக்கவும் சாப்பிடவும், பள்ளிக்கூடம் போகவும் அவன் மாடியிலிருந்து கீழே இறங்கி வரும் சமயங்களில் அவள் எங்கேயோ ஒரு மூலையில் பதுங்கி விட்டிருப்பான், எங்கேயாவது ஒளிந்து நின்றபடியே மாடிப் படிகளில் இறங்கிவரும் சுந்தரத்தின் அழகிய முகத்தையும், மிடுக்கான நடையையும், நன்கு வளர்ந்துவிட்ட கம்பீரமான தோற்றத்தையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பாள்.

சில நேரங்களில் அவர்கள் இருவரும் எதிர்பாராத விதமாகச் சந்தித்துக் கொள்வதும் உண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் சகுந்தலா கண்ணிமைகள் படபடக்க, புன் முறுவல் பூத்தபடியே அந்த இடத்தினின்றும் நழுவி மின்ன வென மறைந்து விடுவாள்.

கூடத்து கடிகாரத்தில் மணி எட்டு அடித்தது. சர்மாவின் சகோதரி காவேரிப் பாட்டி மணைக்கட்டையைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்துவிட்டாள். மாடி அறையில் மேஜை முன் உட்கார்ந்து சுவாரசியமாக சித்திரம் வரைந்து கொண்டிருந்தான் சுந்தரம். அழகிய தாமரை மலர் ஒன்று இதழ் விரித்துச் சிரிக்கிறது; வண்டு ஒன்று அதை நாடி வருகிறது. இதுதான் சித்திரம். ‘சுந்தரம் கை தேர்ந்தசித்திரக்காரனாகிவிட்டான்’ என்பதை அம் மலர் வண்டினிடம் சொல்லிக் கொண்டிருந்தது!

திடீரெனப் பின் பக்கத்திலிருந்து முல்லை மொட்டின் நறுமணம் கமழ்ந்து வருவதை உணர்ந்த சுந்தரம், ‘சகுந்தலா வருகிறான்!’ என்பதைக் கண்டு கொண்டுவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/20&oldid=1306846" இலிருந்து மீள்விக்கப்பட்டது