பக்கம்:வழிப்போக்கன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

செடியில் இருக்கும் மொட்டுகள் மலரும் வரை வண்டு அவற்றை அண்டி வட்டமிடவும், ஊதிக் களிக்கவும் அனுமதிக் கப்படுகின்றன. மலர்ந்துவிட்ட மறுகணமே அந்தப் பூக்கள் கடவுளின் வழிபாட்டுக்குரிய புனித சின்னங்களாகி செடியி லிருந்து பறிக்கப்பட்டு விடுகின்றன. அப்புறம் அம் மலர்களை வண்டுகள் அண்டவோ, தீண்டவோ முடிவதில்லை.

பூரண மலர்ச்சியுடன், புதுமைப் பொலிவுடன், மோகன வசீகரத்துடன் பூஜை அறையில் காத்திருக்கும் புஷ்பமென விளங்கினாள் சகுந்தலா.

அவள் இப்போது சுந்தரத்தின் நெருக்கத்துக்கு எட்டாத ஒரு புனிதப் பொருள். சுந்தரம் அவளை அண்ட விரும்பிய போதெல்லாம் அவள் எட்டாத பொருளாகத் தொடுவானம் போல் தொலைவில் நகர்ந்து போய்க் கொண்டிருந்தாள். அதற்குக் காரணம், அவ்விருவருக்கும் இடையே சர்மா ஒரு பெரும் வேலியைப் போட்டுத் தடுத்து வைத்திருந்தது தான். கட்டுப்பாடு என்னும் அவ்வேலியைக் கடக்கவோ, கலைக்கவோ முடியவில்லைஅவர்களால்.

இளமைத் தொடக்கத்தில் நின்று தயங்கிக் கொண்டிருந்த சுந்தரத்தின் உள்ளத்தை ஏதோ ஒரு கவர்ச்சி மயக்கி அனழத்தது.

மலர்ந்த தாமரையெனக் குலுங்கி நின்ற சகுந்தலாவின் வனப்பும் வசீகரமும் சுந்தரத்தைக் கவர்ந்திழுக்கும் மயக்கத்தின் மாயமாயிருக்குமோ ?

சுந்தரம் எப்படியோ ஐந்தாவது பாரத்தை எட்டிப் பிடித்துவிட்டான். சகுந்தலா மட்டும் மூன்றாவது பாரத் தோடு படிப்பை முடித்துக்கொண்டு விட்டாள்.‘போதும் படிப்பு’ என்று சர்மாதான் அவள் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/19&oldid=1315914" இலிருந்து மீள்விக்கப்பட்டது