பக்கம்:வழிப்போக்கன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

“சாப்பிட்டேன்!”

“தினமும் காலையில் ஆறு மணிக்குள் எழுந்து விட வேண்டும்; தெரிஞ்சுதா? இது மாங்குடி இல்லே; ஆற்காடு. ராத்திரியில் பத்து மணி வரை படிக்க வேண்டும். ஹெட் மாஸ்டரிடம் சொல்லி உன்னை பஸ்ட் பாரத்தில் சேர்த்து விடுகிறேன். காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு, நெற்றிக்கு இட்டுக்கொள்ள வேண்டும். பிறகு, ஒன்பது மணிவரை படிப்பு; அப்புறம் சாப்பிட்டு விட்டுப் பள்ளிக்கூடம். என்ன?”

சுந்தரம் பயந்தபடியே தலையை ஆட்டினான். அன்று மாலை சர்மா மண்டியிலிருந்து திரும்பி வந்தபோது ஞாபகமாக சுந்தரத்துக்கு நாலு சட்டைகளும் நிஜார்களும் வாங்கி வந்து, “இந்தா இவற்றைப் போட்டுக் கொள்; துணிகளை அழுக்காக்காமல் வைத்துக்கொள்!” என்றார்.

ஆறு மாதங்களுக்குள்ளாகவே சுந்தரத்துக்கும் சகுந்தலாவுக்கும் இடையே நட்பு வளர்ந்துவிட்டது. சர்மா அதைக் கவனிக்காமல் இல்லை. இருவரும் ஒரே வகுப்பில் ஒரே செக்க்ஷனில் படித்துக்கொண்டிருந்தார்கள். ஆயினும் படிப்பிலே சுந்தரத்தினால் சகுந்தலாவோடு போட்டி போட முடியவில்லை.

சித்திரம் வரைவதில் மட்டும் அவனுக்கு முன்னைக் காட்டிலும் அப்போது நல்ல தேர்ச்சி ஏற்பட்டிருந்தது. அதாவது,முன்னெல்லாம் அவன் ஒரு யானையின் படத்தைப் பார்த்து எழுதினால் அது ஒட்டகம் மாதிரி இருக்கும். இப்போது அப்படி, இல்லை; பார்க்காமல் எழுதினாலே ஒட்டகம் மாதிரி இருக்கிறது!

சர்மா வீட்டிலே இல்லாத நேரங்களில் சகுந்தலாவுக்கும் சுந்தரத்துக்கும் ஒரே கும்மாளம்தான்! பாட்டிதான் செவிடாயிற்றே? இவர்கள் அடிக்கும் “லூட்டி” அவர்கள் காதிலே விழாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/18&oldid=1315924" இலிருந்து மீள்விக்கப்பட்டது