பக்கம்:வழிப்போக்கன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

சொல்லிக் கொடுப்பதா, வேண்டாமா என்று குழம்பித் தவிக்கலானார்.

சகுந்தலா வயது வந்த பெண்ணாகிவிட்ட பிறகு அவளுக்கு உரியவன் அல்லாதவனாகி விட்ட ஓர் ஆண் மகனை, தம் வீட்டுக்குள் புழங்க விடுவதில் அவருக்குச் சிறிதளவும் சம்மதமில்லை. ஆயினும் இந்த இக்கட்டான, தர்ம சங்கட மான நிலையைத் தம் ஆருயிர் நண்பரான கங்காதரய்யரிடம் எப்படிச் சொல்வது?

சுந்தரைப் பிரிந்து வந்தது முதல் சகுந்தலாவுக்கும் மன நிம்மதி இல்லை. அவளுடைய நினைவெல்லாம் மாங்குடியிலேயே இருந்தது. அன்றிரவு நடந்த நிகழ்ச்சிகள், சுந்தரின் பொல்லாத்தனம், தான் கதவைத்தாளிட்டுக்கொண்டு அவனை அழ வைத்தது, பூனை என்று கூக்குரலிட்டுப் பயமுறுத்தியது.— இவ்வளவும் தன் நினைவில் நிழலாடியபோது அவள் கன்னம் குழியச் சிரித்துக்கொண்டாள். அந்த மாயக் கள்ளனின் நினைப்பிவேயே மயங்கிக் கிடந்தாள். மாடிக்குப் போனால் அவன் ஆசை முகம்; தோட்டத்துக்குச் சென்றால் அவனுடைய அழகிய தோற்றம்!....

மாடியிலுள்ள சுந்தரின் அறைக்குள் சென்று பார்த்தாள் அவள். அங்கே அவன் உட்கார்ந்திருப்பது போலவும், சித்திரம் வரைவது போலவும், சிரிப்பது போலவும், பின்னலைப் பிடித்து இழப்பது போலவும் பிரமை தட்டிற்று அவளுக்கு. மேஜை டிராயரைத் திறந்தபோது, அவன் வரைந்து விட்டுப் போயிருந்த அவ்வழகிய தாமரை மலர் அவளைக் கண்டு இதழ் விரித்துச் சிரித்தபடி, “ஏ, கறுவண்டே!எங்கே வந்தாய்?” என்று கேலி செய்வது போலிருந்தது.

‘சுந்தருக்கு எவ்வளவு அழகாகச் சித்திரம் வரைய வந்து விட்டது?’, என்று தன்னுள் வியந்துகொண்டே அதை எடுத்துத் தன் பெட்டிக்குள் வைத்துக்கொண்டாள் அப் பேதை.

ஊஞ்சலில் போய் உட்கார்ந்தபோது சுந்தரும் தானும் அதில் விளையாடிய காட்சியும்,அவனுக்குத் தலை பின்னிய காட்சியும் நினைவுக்கு வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/41&oldid=1306842" இலிருந்து மீள்விக்கப்பட்டது