பக்கம்:வழிப்போக்கன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

“அப்போ சுந்தர் இன்னும் இரண்டு வருஷங்கள் ஆற்காட்டிலேயே இருந்து படிப்பான்!” என்று மனதிற்குள்ளாகவே மகிழ்ந்து கொண்டாள் சகுந்தலா.

சர்மாவோ, ‘சுந்தரம் பரீட்சையில் தவறிவிட்டதும் ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிற்று. இப்போது அவனுக்கு வயது பதினெட்டுக்கு மேல் ஆகிறது. ஐந்தாவது பாரத்துக்கு மீறிய வயசு. இதற்கு மேலும் அவன் ஆற்காட்டில் தங்கிப் படிக்க விரும்ப மாட்டான் அல்லவா?’ என்று எண்ணித் திருப்தி அடைந்தார்.

சுந்தரத்தின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்ததிலிருந்தே அவர் தம்முடைய மனதை மாற்றிக்கொண்டு விட்டார். அவனைச் சுவீகாரமாக்கிக் கொண்டு சகுந்தலாவின் வாழ்வைப் பாழாக்குவதுடன், தாமும் அனாதையாகச் சாவதற்கு அவர் மனம் ஒப்பவில்லை. எனவே, சுந்தரத்துக்கும் தமக்கும் ஏற்பட இருந்த உறவு பந்தத்தை அப்போதே அறுத்தெறிந்துவிட அவர் முடிவு செய்துவிட்டார்.

தபாற்காரர் கொடுத்துவிட்டுப் போன கடிதத்தைப் பிரித்துப் படித்துக்கொண்டிருந்த கங்காதரய்யரின் முகம் ஒரு மாதிரியாக மாறுவதைக் கண்ட பார்வதி அம்மாள் கவலையுடன், “யார் கடிதாசு அது? சர்மாவா போட்டிருக்கார்?” என்று கேட்டாள்.

“ஆமாம்; உன் பிள்ளையாண்டான் பெயிலாகி விட்டானாம்!” என்றார் கங்காதரய்யர் கலக்கத்துடன்.

“பெயிலாயிட்டானா! ராத்திரியெல்லாம் கண் விழிச்சுப் படிச்சிருக்கேன்னு சொன்னானே?” என்றாள் பார்வதி.

“ராத்திரியெல்லாம் கண் விழித்து டிராயிங் போட்டிருப்பான்!” என்றார் அவர். கிணற்றடியிலிருந்த சுந்தரம் அப்போது தான் அங்கே வந்து நின்றான்.

“இந்தா, சர்மா என்ன எழுதியிருக்கார் பார்?” என்று கூறிய கங்காதரய்யர் கடிதத்தைக் கோபமாக வீசி எறிந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/43&oldid=1306816" இலிருந்து மீள்விக்கப்பட்டது