பக்கம்:வழிப்போக்கன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

கிட்டியது. எங்கே போய்க் கேட்டாலும், இப்போது வேண்டாம் அல்லது இப்போதுதான் எழுதினோம்” என்ற இரண்டு விதமான பதில்களே கிடைத்தன. அவர்களாகத் தேடிக்கொண்டு வந்து கொடுக்க வேண்டிய ஒரு வேலையை நாமாகத் தேடிச் செல்லும்போது வேறு என்ன பதிலை எதிர்பார்க்க முடியும்?

நாளை ராயருக்கு ரூம் வாடகை கொடுத்தாக வேண்டும். இன்றே அவர் ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுப் போய்விட்டார். கையிலிருப்பதோ பத்தணா தான். ஆமாம், பத்தே அணா!

எங்கேயாவது போய், யாரையாவது கேட்டு, எப்படியாவது ஒரு போர்டுக்கு ஆர்டர் பிடித்துக்கொண்டு வந்தே தீருவதென்ற திட சங்கல்பத்துடன் அந்தப் பத்தணாவை எடுத்துப் பையில் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினான் சுந்தரம்.

கால் நடையாகவே பெல்ஸ் ரோடு வழியாகச் சென்று வாலாஜா ரோடில் திரும்பினன். அப்போது யாரோ கை தட்டிக் கூப்பிடும் சத்தம் கேட்ட சுந்தரம் திரும்பிப் பார்த்தான். அவனை அழைத்தது ஒரு போலீஸ்காரர்: “இங்கே வா!” என்று கூப்பிட்ட அவர் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்று கொண்டிருந்தார். சுந்தருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“உன்னைத்தாம்பா, இங்கே வா!” போலீஸ்காரர் சற்று அதிகாரமாகவே கூப்பிட்டார்.

சுந்தரம் பயந்தபடியே ஸ்டேஷனுக்குள் சென்றான். அவனைப் பின்தொடர்ந்து வந்த கான்ஸ்டேபிள் தன் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

“எங்கிருந்து வரே?”

திருவல்லிக்கேணியிலிருந்து.

“எங்கே போறே?”

“தங்கசாலைத் தெருவுக்கு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/51&oldid=1309619" இலிருந்து மீள்விக்கப்பட்டது