பக்கம்:வழிப்போக்கன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

“யார் நீ?”

“பெயிண்டர்! உங்க ஆபீஸ் போர்டு...” என்று இழுத்தான் சுந்தரம்.

“ஆமாம் பழசாப் போயிடுச்சு! வேற புதுசா எழுதிகிட்டு வரயா? என்ன சார்ஜ் பண்ணுவே?”

“என்ன கொடுத்தாலும் வாங்கிக்கறேன்!” என்றான் சுந்தரம். அந்தப் பத்திரிகையுடன் எப்படியாவது தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவனுடைய நீண்ட நாளைய அவா. அதற்கு வாய்த்துள்ள சந்தர்ப்பத்தை நழுவ விட மனம் இன்றியே ‘கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன்!’ என்றான் அவன்.

“சரி, போர்டை எடுத்துக்கிட்டுப் போ! சீக்கிரம் முடிச்சு கொண்டாரணும்!”

“ஆகட்டும், அட்வான்ஸ் ஏதாவது ..”

“அட்வான்ஸா? உன்னை நம்பி போர்டைக் கொடுக்கிறேனே. அது போதாது?”

போர்டைக் கழற்றிச் சென்ற சுந்தரம் ஒரே வாரத்துக்குள் அதை எழுதியும் முடித்துவிட்டான் பணம்தான் கைக்கு வரவில்லை.

‘நாளைக்கு, நாலு நாள் கழித்து, ஒரு வாரத்துக்கப்புறம்’ என்று எத்தனையோ கெடு வைத்தும்கூட சுந்தரம் திரும்பத் திரும்பச் சலிக்காமல் போய்க்கொண்டே இருந்தான். அந்த முதலாளிக்கே அவனிடம் ஒரு தயையும் தாட்சணியமும் பிறந்துவிட்டது. ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.

முழுப் பணம் வராதது பற்றிச் சுந்தரத்துக்கு ஒரு விதத்தில், மகிழ்ச்சியே! அந்தத் தாட்சணியத்தை வைத்துக் கொண்டு, முதலாளியிடம் இருந்து வேறொரு காரியத்தைச் சாதித்துக் கொள்ளச் சமயத்தை எதிர் நோக்கியிருந்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/56&oldid=1322753" இலிருந்து மீள்விக்கப்பட்டது