பக்கம்:வழிப்போக்கன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

மரத்தைத் தழுவிக்கொண்டிருந்தது. அந்தச் சித்திரம் சகுந்தலாவின் இதயத்தைத் தாக்கியது.

“நான் வருகிறேன், சகுந்தலா!”

சுந்தர் எழுந்து நடந்தான்.

“சுந்தர்!”

சகுந்தலா வாய்விட்டுக் கூவிவிட்டாள். அங்கே அவனைக் காணவில்லை; அவன் வரவேயில்லை. இத்தனை நேரமும் அப்படி ஒரு பிரமை!...

காலையில் அவசரமாகப் புறப்பட்டுச் சென்ற சுந்தரம் பார்க் டவுன் கந்தசாமிக் கோயில் பக்கம் சென்றான். ஞாயிற்று கிழமையானதால் அங்கே உள்ள பெயிண்டு ஷாப்புகள் அத்தனையும் மூடிக் கிடந்தன. மறுபடியும் டிராம் வண்டியைப் பிடித்துத் திருவல்லிக்கேணிக்குப் போய்ச் சேர்ந்தான். அதற்குள் மணி பதினொன்று ஆகிவிடவே, நல்ல பசி எடுத்து விட்டது. எனவே, வழக்கமாகச் சாப்பிடும் ஓட்டலுக்குச் சென்று, இலைக்கு முன்னால் உட்கார்ந்தான் அவன். சாப்பிடும் போது அவன் மனமெல்லாம் ஆற்காட்டிலேயே இருந்தது.

“இந்த நேரத்தில் முகூர்த்தம் முடிந்து, எல்லோரும் வடை பாயசத்துடன் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள்!” என்று எண்ணிக் கொண்டான்.

“சார், பாயசம் போடட்டுமா?”

ஓட்டல் சர்வர் பாயசத்தை இலையில் பரிமாறினான்.

“பாயசமா! இன்றைக்கு என்னப்பா விசேஷம்?”

“ஸ்பெஷல் சார் சண்டே ஸ்பெஷல்!” என்றான் அவன்.

“பாயசம் எனக்குப் பிடிக்காது!” என்று கூறிய சுந்தர், அதை ஒதுக்கிவிட்டுச் சாப்பாட்டை அவசரமாக முடித்துக் கொண்டு எழுந்துவிட்டான்.

நேராகத் தன் அறைக்குச் சென்று படுத்தவன்தான்: அன்றெல்லாம் ஒரு வேலையும் ஓடவில்லை அவனுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/62&oldid=1322754" இலிருந்து மீள்விக்கப்பட்டது