பக்கம்:வழிப்போக்கன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

எப்படியோ ஒரு வழியாகச் சென்னைக்கு வந்து சேர்ந்தாள் காமு. அதில் அவளுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி; சொர்க்கத்துக்கே வந்து விட்டது போன்ற திருப்தி!

'இனி எந்தக் கஷ்டம் வந்தபோதிலும் கணவனே விட்டுப் பிரிவதில்லை' என்று உறுதி பூண்டாள் அவள்.

பீஸ் அறையில் உட்கார்ந்து சித்திரம் வரைந்து கொண்டிருந்த சுந்தரத்தை அழைத்தான் சோமு. சுந்தரம் எதிரில் போய் நின்றதும், "காஞ்சீபுரத்திலே ஒரு கலியாணமாம். போயிட்டு சாயந்திரம் திரும்பி வந்துடுறேன். அதுவரைக்கும் கொஞ்சம் ஆபீசைக் கவனிச்சுக்கிறீங்களா?” என்று கேட்டான்.

"போயிட்டு வாங்களேன், குடும்பத்தோடு போறீங்களா?" என்று கேட்டான் சுந்தரம்.

"ஆமாம்; கலியாணத்தைச் செஞ்சுக்கிட்டது பெரிய சள்ளையாயிருக்கு. அங்கிட்டு வா, இங்கிட்டுவான்னு உயிரை எடுத்துடறாங்களே!” என்றான் சோமு.

"ஏன் இப்படி சலிச்சுக்கிறீங்க? குடும்பம்னா அப்படித்தான் மனைவியோடு சந்தோஷமாப் போயிட்டு வாங்க!" என்றான் சுந்தரம்.

"மனைவியோடு போறப்போ சந்தோஷம் எப்படி ஐயா இருக்க முடியும்?" என்று மேலும் சலித்துக்கொண்டே புறப்பட்டான் சோமு.

மதியம் சுந்தரம் வீட்டுக்கு சாப்பிட வந்தபோது அவன் மனைவி குழந்தையைத் தன் மடியிலே கிடத்திக் கொண்டு சோகமே உருவாய் உட்கார்ந்திருந்தாள். அதைக் கண்ட சுந்தரம் பதறிப்போய், "என்ன காமு! குழந்தைக்கு என்ன?” என்றான்.

"காலையிலிருந்தே நல்ல ஜூரம்; உடம்பு அனலாய்க் கொதிக்கிறது. கண்ணைத் திறக்காமல் படுத்துக் கொண்டிருக்கிறது!" என்றாள் அவன் மனைவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/82&oldid=1307794" இலிருந்து மீள்விக்கப்பட்டது