பக்கம்:வழிப்போக்கன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

அவன் குழந்தையைத் தொட்டுப் பார்த்தான். அதன் உடம்பு நெருப்பாகச் சுட்டுக் கொண்டிருந்தது. குழந்தைக்கு வைத்தியம் செய்யக்கூடத் தனக்குச் சக்தி இல்லையே என்பதை எண்ணியபோது அவனுக்கு வாழ்க்கையின் மீதே வெறுப்புத் தோன்றியது.

"ஆபீசிலிருந்து பணம் வாங்கி வந்திருக்கிறீர்களா?" என்று அவன் மனைவி கேட்டபோது, "இல்லை, அவன் ஊருக்குப் போயிருக்கிறான்"என்றான் சுந்தரம்.

"அப்படியானல் இப்போது பணத்துக்கு என்ன செய்ய போகிறீர்கள்? இந்தச் சமயத்தில் நமக்கு யார் உதவப் போகிறார்கள்?" என்றாள் காமு.

"அதுதான் எனக்கும் புரியவில்லை" என்று கூறிய சுந்தரம் ஒன்றும் தோன்றாதவனாக உள்ளம் குழம்பியவனாகத் தவித்துக் கொண்டிருந்தான்.

இருந்த நகை நட்டுகளையெல்லாம் விற்று இரண்டு மாதம் ஒட்டியாயிற்று. வாழ்க்கைச் சக்கரம் உருளாமல் ஸ்தம்பித்து நின்றுவிடும் நிலைக்கு வந்துவிட்ட இந்த நேரத்தில் சோதனையாக குழந்தைக்கு ஜூரம் கண்டிருக்கிறது! மருந்து வாங்கக் கூட கதியற்ற நிலையில், பரிதாபமான கோலத்தில் தத்தளித்து கொண்டிருந்தான் அவன்.

அப்போது கூடத்து அலமாரியில் அருந்த கம்பராமாயண புத்தகம் அவன் கண்ணில் பட்டது. 'கஷ்டம் வரும்போது கம்பராமாயணத்தைப் எடுத்துப் படி' என்று சர்மா சொன்ன வார்த்தை அவன் நினைவுக்கு வந்தது. அந்தக் கம்ப ராமாயணத்தை எடுத்து அதன் முதல் பக்கத்தில் இருந்த 'விலைரூபாய் பதினைந்து' என்ற வரியைப் படித்தான்.

அதைக் கண்டதும் 'இந்தக் கம்ப ராமாயணத்தையே விற்று விட்டால் என்ன?’ என்று ஒரு யோசனை பளிச்சிடவே, அடுத்த கணமே அந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துத் கொண்டு வெளியே புறப்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/83&oldid=1305180" இலிருந்து மீள்விக்கப்பட்டது