பக்கம்:வழிப்போக்கன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

"ராமாயணத்தை எங்கே எடுத்துக்கொண்டு போகிறீர்கள்? சர்மா கொடுத்ததல்லவா அது?" என்று கேட்டாள் காமு.

"மூர்மார்க்கெட்டில் கொண்டுபோய் விற்றுப் பணம் கொண்டு வருகிறேன். வேறு கதியே இல்லை" என்று கூறிவிட்டு போனான் சுந்தரம்.

அந்தக் கஷ்ட காலத்திலும் சர்மா கொடுத்த கம்ப ராமாயணமே அவனுக்கு உதவியது. அதை விற்றதில் பன்னிரண்டு ரூபாய் கைக்குக் கிடைத்தது! திரும்பி வரும் போது கையோடு டாக்டரை அழைத்துக்கொண்டு வந்தான். குழந்தைக்கு இரண்டு இஞ்செக்க்ஷனைப் போட்டார் டாக்டர். புத்தகம் விற்ற பணத்தில் மருந்துக்கும் டாக்டர் பீஸுக்குமாகச் சேர்த்து பத்து ரூபாய் தீர்ந்துவிட்டது. ஆயினும் குழந்தைக்குக் குணம் காணவில்லை.

"சாயந்திரம் வந்து இன்னொரு இஞ்செக்க்ஷன் போடுகிறேன் வேறொரு மருந்து எழுதித் தருகிறேன். அதை வாங்கி வையுங்கள்" என்று கூறிய டாக்டர் அந்த மருந்தின் பெயரைச் சீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார். அப்போது அவன் கையில் மிஞ்சியிருந்தது இரண்டே ரூபாய்! மருந்து வாங்க அந்தப் பணம் போதாதே!

"உங்கள் நண்பர் வந்திருப்பாரா? ஆபீசில் போய்க் கேட்டு பாருங்கள். குழந்தைக்கு ஆபத்தான இந்தச் சமயத்தில்கூடவா உதவி செய்யமாட்டார். உங்கள் நண்பர்?" என்றாள் மனைவி.

"அவன் சங்கதி உனக்குத் தெரியாது. வள்ளுவர் பெயரை வைத்துக்கொண்டு ஊரையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் அந்த மோசக்காரன். காரியம் ஆகிறவரை எனக்கு உதவி செய்வதுபோல் பாசாங்கு செய்து கொண்டிருந்தான். இனி அவன் ஒரு தம்படி கொடுக்க மாட்டான்......"

“எதற்கும் நீங்கள்போய்க் கேட்டுப் பாருங்கள்..." என்று அவன் மனைவி பிடிவாதமாகக் கூறவே, சுந்தரம் தயக்கத்துடன் புறப்பட்டுச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/84&oldid=1306877" இலிருந்து மீள்விக்கப்பட்டது