பக்கம்:வழிப்போக்கன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

அப்போதுதான் காஞ்சிபுரத்தில் இருந்து திரும்பியிருந்த சோமு, சுந்தரத்தைக் கண்டதும் "என்னய்யா, ஆளையே காணோமே, எங்கே போயிருந்தீங்க?" என்று கேட்டான்.

"குழந்தைக்கு ஜூரம்..."

"காய்ச்சலா? என்ன காய்ச்சல்?"

"வயிற்றிலே கட்டி. அதுக்கு வைத்தியம் செய்ய வசதியில்லே. இப்போது கட்டி முற்றிக் காய்ச்சலிலே கொண்டுவந்து விட்டிருக்கிறது. ரொம்ப சீரியஸாக இருக்கிறது. இந்தச்சமயம் நீங்க பண உதவி செய்தால் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்கு உண்டு..." என்று கூறினான் சுந்தரம்.

"செய்யலாம்; ஆனால் வி.பி.பணம், மணியார்டர் ஒரு எளவும் வரலையே இன்னைக்கு. நாளைக்கு ஆகட்டும் பார்க்கலாம்” என்றான் சோமு.

உணர்ச்சி அலைகள் உடல் முழுதும் ஊடுருவிப் பாய, கலங்கிய உள்ளத்தோடு, கவலை தோய்ந்த முகத்துடன், கண்களில் நீர் தளும்ப வீட்டுக்குத் திரும்பி நடந்தான் சுந்தரம். அவன் உள்ளம் நொந்து உடல் குன்றிக் கிடந்தது. வீட்டுக்குள் நுழைந்தபோது அங்கே அவன் மனைவி குலுங்கிக் கதறிக் கொண்டிருப்பதைக் கண்டான்.

"ஐயோ, குழந்தைக்கு என்ன?..."

"அப்பா, பாப்பா செத்துப் போச்சி." விக்கியபடியே கூறினாள் சுந்தரத்தின் தலைச்சன் குழந்தை சாரதா.

"காமு!..." என அலறிவிட்டான் சுந்தரம்.

அவள் ஒன்றுமே பேசவில்லை. உதடுகள் குவிந்து துடிக்க, கண்ணீர் பெருக்கெடுத்தோட கணவனை ஏறிட்டுப் பார்த்தாள். துக்கம் அவள் வயிற்றைக் கடைந்து கொண்டிருந்தது. இதற்குள் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் விஷயம் தெரிந்து கொண்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/85&oldid=1305707" இலிருந்து மீள்விக்கப்பட்டது