பக்கம்:வழிப்போக்கன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

“...ம்...கொடுத்து வைத்தது அவ்வளவுதான்; மேலே ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்கள்...” என்றார். அவர்களில் ஒருவர்.

‘மேலே ஆக வேண்டிய காரியமா? ஐயோ, கையில் காலணு இல்லையே! இப்படியும் ஒரு சோதனையா?’ சுந்தரத்தின் இதயம் விம்மி வெடித்துவிடும் போலிருந்தது. துடியாய்த் துடித்துப் போனான் அவன்.

“சார், இப்படிக் கொஞ்சம் வருகிறீர்களா?” என்று அழைத்தார் பக்கத்து வீட்டுக்காரர். முதல் நாள்தான் அடுத்த வீட்டுக்குக் குடி வந்திருந்தார் அவர். தவிக்கும் சுந்தரத்தின் பரிதாப நிலையை ஊகித்துக் கொண்ட அவர், “சார், கையில் பணம் இருக்கிறதா? இல்லையென்றால் நான் தருகிறேன். இந்தாருங்கள் பதினேந்து ரூபாய்...போதுமா இது? இந்தப் பணம் ஒரு நாள் எனக்குப் பாலாற்றங்கரையில் கிடைத்தது. யாரோ பாவம், பையோடு மறந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் இத்தனை நாளும் இதைப் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருந்தேன்” என்று கூறிய அவர் இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுக்களையும் ஐந்து ஒற்றை ரூபாய் நாணயங்களையும் சுந்தரிடம் கொடுத்தார்.

அவர் கொடுத்த அந்தப் பதினைந்து ரூபாயைக் கையில் வாங்கிக் கொண்ட சுந்தருக்குத் துக்கம் தொண்டையைப் பொத்துக்கொண்டு வெளிப்பட்டது.

“ஏன் சார் அழுகிறீர்கள்? நடந்தது நடந்து விட்டது...ம் ஆக வேண்டியதைப் பாருங்கள்” என்றார் அடுத்த வீட்டுக்காரர்.

“இந்தப் பணம் என்னுடைய குழந்தையினுடையதுதான் சார். அவன் பிறந்த தினத்துக்கு ஆசிர்வாதமாகக் கிடைத்த பணம். குழந்தைக்கு வெள்ளி அரைஞாண் வாங்கிப் போட வேண்டும் என்று அதன் தாயார் ஆசையோடு வைத்திருந்தாள் நான்தான் அதை வாங்கிவந்து பையோடு பாலாற்றங்கரைப் பிள்ளையார் கோயில் எதிரில் மறந்து வைத்துவிட்டேன். அரை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/86&oldid=1322802" இலிருந்து மீள்விக்கப்பட்டது