பக்கம்:வழிப்போக்கன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

"குண்டுக்கு அஞ்சி உன்னை ஊருக்கு அனுப்பவில்லை காமு! உத்தியோகம் இல்லாததால்தான் அனுப்புகிறேன்."

ஜப்பான் குண்டே தன் தலையில் விழுந்தது மாதிரி இருந்தது அவளுக்கு.

"உத்தியோகம் இல்லையா வள்ளுவர் ஆபீஸ் உத்தி யோகம்?..."

"அதை விட்டு இருபது நாள் ஆகிறது. சோமுக்கும் எனக்கும் கொஞ்சம் தகராறு...அவனுடைய சகவாசம் எனக்குப் பிடிக்கவில்லை...”

"அவன் எப்படியோ இருந்து விட்டுப் போகிறான். அதைப் பற்றி உங்களுக்கென்ன? எந்த ஆபீசுக்குப் போனலும் இப்படி ஏதாவது சண்டை பிடித்துக்கொண்டு வேலையை விடுவது உங்களுக்கு விளையாட்டாக இருக்கிறது."

"சம்பளமே கிடைக்காத இந்த வேலை போய்விட்டதே என்று யாராவது வருத்தப்படுவார்களா?”

"என்ன வந்தாலும் சரி. நான் ஊருக்குப் போகப் போவதில்லை. மீண்டும் அந்தக் கிராமத்துப் பீடைகள் கேட்கும் கேள்விக்கெல்லாம் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதைக் காட்டிலும் இங்கேயே செத்து மடிந்து போகிறேன்."

"உன்னுடைய நிலைமை எனக்குப் புரிகிறது. ஆனால் என் நிலைமையை அறிந்துகொள்ளத்தான் உனக்குச் சக்தியில்லை."

"ஊரார் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்?"

"எல்லோரையும்போல் பட்டணத்தைக் காலி செய்து வந்து விட்டதாகச் சொல்லு. சீக்கிரமே ஒரு வேலை தேடிக் கொண்டு உன்னைத் திரும்ப அழைத்துக் கொள்கிறேன்."

"...ம்...அந்தக் காலம்எப்போதோ?" நம்பிக்கையின்றி, உணர்ச்சியின்றி நிராசையோடு ஒலித்தது அவள் குரல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/88&oldid=1313667" இலிருந்து மீள்விக்கப்பட்டது