பக்கம்:வழிப்போக்கன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94


அந்தக் கட்டடங்களைச் சுற்றி வளைத்து வேலிக் கம்பிகள் போட்டு, கைதிகள் தப்பி ஓடாமல் இருக்கும் பொருட்டு அவற்றோடு சில மின்சாரக் கம்பிகளையும் இணைத்து வைத்திருந்தார்கள், சிறை அதிகாரிகள்.

பத்திரிகைச் செய்திகள் அளித்த உற்சாகத்தின் காரணமாக சிலர் சிறைக் கூடத்திலேயே புரட்சி நடத்தவேண்டுமெனத் துடித்தார்கள். அவர்களில் எம். ஏ. பி. எல்லும் ஒருவர். அவர்தான் அந்தப் புரட்சி கோஷத்தையே சிறைக்குள் முதல் முதல் எழுப்பினார். இராக்காலத்தில் அவரும் இன்னும் சில பயங்கரவாதிகளும் சேர்ந்து இதர கைதிகளைக் கூட்டி வைத்துக்கொண்டு பிரசாரம் செய்தார்கள்.

"சிறைக்குள்ளே நாம் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டார் கூட்டத்தில் ஒருவர்.

"இந்தச் சிறையில் இப்போது சுமார் மூவாயிரம் பேர் கூடியுள்ளோம். இவ்வளவு பேரும் சேர்ந்து சிறைக் கம்பியை உடைத்துக்கொண்டு வெளியேறினால் நம்மை யார் தடுக்க முடியும்?" என்றார், எம். ஏ. பி. எல்.

"வேலிக் கம்பியில் மின்சாரம் இருக்கிறதே! தொட்டால் செத்துப் போவோம்" என்றார் ஒரு பயங்காளி.

"சிறைக் கதவை உடைத்துக்கொண்டு செல்வோம். தபாலாபீசைக் கொளுத்தியவர்களுக்கு, தண்டவாளத்தைப் பெயர்த்தவர்களுக்கு, பாலத்தை உடைத்தவர்களுக்கு இந்தச் சிறைச்சாலையை உடைப்பது ஒரு பிரமாதமா?”

"உஷ்! உரக்கப் பேசாதீர்கள். வார்டர்கள் விளக்கை வைத்துக் கொண்டு நம் பிளாக்கைச் சுற்றிச் சுற்றி 'ரோந்து' போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காதில் விழப் போகிறது" என்றார் ஒருவர்.

"நாம் பேசுவது அவ்வளவு தூரத்திலுள்ள வார்டர்கள் காதில் விழாது" என்றான் சுந்தரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/94&oldid=1321855" இலிருந்து மீள்விக்கப்பட்டது