பக்கம்:வழிப்போக்கன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

தபாலில் சேர்க்கச் சொல்கிறார்’ என்று தனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டான் சுந்தரம். அவனுடைய மனப் போராட்டங்களெல்லாம் தீர்ந்து வெகு இலேசாகிவிட்டிருந்த நேரம் அது.

தெருக் கோடியில் இருந்த தபால் பெட்டியில் ராயர் கொடுத்த கடிதத்தைப்போஸ்ட் செய்துவிட்டு, தபாலாபீசுக்கு எதிரில் போய் நின்று சுற்று முற்றும் பார்த்தான். குண்டுக்கு அஞ்சி சென்னை நகர மக்களில் பாதிப் பேருக்கு மேல் வெளியூர் போய் விட்டிருந்ததால் தெருவில் ஆள் சந்தடி அதிகமில்லை. உணர்ச்சி மேலிட்டால் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது அவனுக்கு. சட்டைப் பைக்குள் தயாராக வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து ஒரு குச்சியைக் கொளுத்தி தபால் பெட்டிக்குள் போட்டான்.

அடுத்த கணமே தபால் பெட்டிக்குள் புகையத் தொடங்கியது. இதைக் கவனித்துக்கொண்டிருந்த போஸ்டாபீஸ் சிப்பந்தி ஒருவர் “தீ‌ தீ” என்று கூச்சலிட்டபடியே ஓடிவந்து சுந்தரத்தைப் பிடித்துக் கொண்டார்.

“என்னை விடுங்கள். நான் ஒடமாட்டேன். போலீசுக்குப் போன் செய்து என்னை வந்து அழைத்துப் போகச் சொல்லுங்கள்” என்றான் சுந்தரம்.

அடுத்த சில நிமிஷங்களுக்குள் அங்கே வந்த போலீசார் சுந்தரத்தைக் கைது செய்து லாரியில் ஏற்றிக்கொண்டு போனார்கள்; வீரத்தின் பெருமை அவனுடைய உள்ளத்தை நிரப்பியது.

“ஆயிரமாயிரம் தேசத் தொண்டர்களில் நானும் ஒருவன். வெளி உலகத்தில் சிறை வாழ்வு நடத்துவதைக் காட்டிலும் சிறைக்குள்ளே நான் நடத்தப் போகும் வாழ்க்கை எவ்வளவோ மேலாயிருக்கும்” என்று எண்ணி மகிழ்ந்தான்.

ஐதர் அலி காலத்தில், யானைகளைக் கட்டி வைப்பதற்காக எழுப்பப் பட்டிருந்த மாபெரும் கருங்கல் கட்டடங்களைத்தான் இன்று ‘அலிபுரம் சிறைச்சாலை’ என்று அழைக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/93&oldid=1322816" இலிருந்து மீள்விக்கப்பட்டது