பக்கம்:வழுக்கு நிலம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 167 பார்வதி மாற்றுப் புடைவை ஒன்று கட்டிக் கொண்டு வந்து நின்றாள். நெற்றிக்குக் குங்குமம் கேட்பதற்கு முன்னால் அவ்வம்மையார் சிறு, வெண் கிண்ணத்தை நீட்டினாள். தந்தத்தால் செய்யப்பட்ட அக்கிண்ணம் சித்திர வேலைப்பாடு பெற்றிருந்தது. குங்குமம் இட்டுக் கொண்டு சிதறிக் கிடந்த தலைமுடியை வாரி முடித்துக் கொண்டாள். "நாங்கள் ஒரு தவறு செய்து விட்டோம். அதனால் அவர் கோபம் கொண்டால் வீண் தகராறுதான் வளரும். அதற்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும்." இவ்வம்மையார் சொன்னதன் கருத்துப் பார்வதிக்கு விளங்கவில்லை. "என்னம்மா என்ன செய்யச் சொல்கிறீர்கள்?" "அவருக்கு உடம்பு சரியாக இல்லை. அதனால் புறப்பட்டு வரவும் என்று உங்களுக்கு எழுதிய கடித்ததைப் பற்றி அவரிடம் பேசக் கூடாது.” "பின் ஏன் வந்தாய் என்று கேட்டால்...? "அதுதான் சொல்ல வந்தேன். நீயே வந்ததாகச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் மேல் வீண்பகை உண்டாகும். இந்தப் பகையைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தால் நீ இந்த உதவி செய்யவேண்டும். பகை உண்டானால் பொருந்தி வாழ முடியாதே என்பதற்காக ‘எங்களவர் கவலைப்படுகிறார். மேலும் எங்கள் வற்புறுத்தலால் உன்னோடு வாழும் வாழ்க்கை நீடித்திராது; இயற்கையானதும் அல்ல; வற்புறுத்தி ஒருவரைத் திருத்த முடியாது என நினைக்கிறார். அதனால்தான் நீ அப்படிச் சொல்ல வேண்டும்." "ஏன் தனியாக வந்தாய் என்று கேட்டால்...?” "அப்பாவோடுதான் வந்தேன். அவர் அவசரமாகத் திரும்ப வேண்டியிருந்ததால் திரும்பி விட்டார் என்று சொல்லிவிடு.” பார்வதி சிறிதுநேரம் தயங்கினாள். அப்பா அழைத்துக் கொண்டு வந்தார் என்றால், அது அவர் முரட்டுத்தனம் வளரக் காரணமாக இருக்குமே என்று சிந்தித்தாள். "இல்லை, நானே வந்தேன் என்று சொல்லி விடுகிறேன். நீங்கள் கவலைப் படாதீர்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/169&oldid=898134" இலிருந்து மீள்விக்கப்பட்டது