பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைகுன்றாச் சொல்லாளர் அண்ணா! கடல்மல்லைத் திருநாட்டுக் காஞ்சிதந்த செம்மல் கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பேற்றும் நீண்ட மடற்றாழை மலர்மணந்து வருந்தென்றற் காற்று! வளர்புன்னைப் பூவிருந்து வண்டெழுப்பும் பாடல்: இடமகன்ற தமிழகத்தின் இருள்போக்கி வானில் எழுந்தசுடர் மாற்றாரும் எண்ணியெண்ணி ஏங்க நடமாடும் அறிவூற்று! தமிழகத்தில் வாய்த்த நல்லமைச்சர் சுவைகுன்றாச் சொல்லாளர் அண்ணா 1 அலைபிறந்த முத்தாரம்! அழகுமணிக் கோவை! அடர்தென்னை மரத்தோப்பு சுவைஇளநீர்க் காய்கள்! மலைபிறந்த நீள்அருவி! மயிலாடு பாறை! வள்ளுவனார் உலகளித்த குறட்பாக்கள்! நீண்ட குலைபிறந்த செவ்வாழை! குளிர்ந்தமலர் ஓடை! குழலோசை தமிழ்நாட்டுக் கொடுமைக்கு வேட்டு! கலைபிறந்த தமிழகத்தின் அரசுக்கு வாய்த்த கதிர்க்கோமான் சுவைகுன்றாச் சொல்லாளர் அண்ணா! 2 முகம்தந்த இளஞ்சிரிப்பு மூதறிஞர் நெற்றி! முனிவில்லா ஒளிக்கண்கள்! முற்போக்கின் எண்ணம்! அகம்தந்த தமிழ்ச்சுவையே அடுக்குமொழிப் பேச்சாம்! அன்புள்ளம் அறச்செயலே அவர்வாழ்வின் நோக்கம்! பகைதந்த ஏச்செல்லாம் பதறாமல் ஏற்கும் பண்பாளர்! அன்பாலே பகைவெல்லும் தீரர்! வகைதந்த அறிவாலே தமிழகத்தை ஆளும் வழிகாட்டி! சுவைகுன்றாச் சொல்லாளர் அண்ணா! 3