உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் வழி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

111


தோன்றின. முதுமையில் முகிழ்த்த செயல்களோ அரும் பெருந் தொண்டுகளாக மலர்ந்தன. அதனால் அவரது இளமையைப் பழமையானது - தாழ்ந்தது என்றிகழவும், முதுமையைப் புதுமையானது - உயர்ந்தது என்று புகழவுஞ் சாலுமா? ஆண்டிற்கேற்ற அறிவிற்கேற்ற அனுபவத்திற்கேற்ற செயல்களே கைவரப்பெற்றன. இதற்கு இயற்கை யென்று பெயர் சூட்டல் நேரிது.

இனியுலகை நோக்குவோம். இவ்வுலகந் தோன்றி ஏறக்குறைய மூன்று கோடி யாண்டுகள் ஆகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் உய்த்துணர்ந்து உரைத்துள்ளனர். இவ்வாண்டுகளை நூறு நூறு ஆண்டுகளாகப் பகுத்துக் கொண்டோமானால், ஒரு நூற்றாண்டிற்கும் மறு நூற்றாண்டிற்கும் உலக வளர்ச்சியில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதை உணரலாம். நீர்ப்பாசி, புல் பூண்டுகளிலிருந்து படிப்படியாக வாலுள்ள குரங்கு, வாலில்லாக் குரங்கு, மனிதன்வரை உயிர்த்தோற்றம் உண்டானதாகக் கருதப்பட்டு வருகின்றது.

மனிதனுக்குத் தொடக்கத்தில் பேசத் தெரியாது. உடை யுடுக்கத் தெரியாது. அந்த அறிவும் அப்போது எட்டவில்லை. சுருங்கச் சொல்லின் பசியுணர்ச்சி யேற்பட்டபோது உணவு தேடி யுண்பதைவிட வேறெதுவுஞ் செய்ய அறியாதவனாகியிருந்தான். இந்நிலையில் வேட்டையாடுவதிலிருந்து பயிர்த் தொழிலுக்குத் தாவினான். படிப்படியாக மண், கல், மரம், இரும்பு முதலியவற்றால் கருவிகள் கண்டு பிடித்தான். தச்சு, நெசவு முதலியன செய்தான். நாளடைவில் வெறும் பேச்சுக்கு மேல் எழுதவும் பழகி, படிக்கவுங்கற்று, பாராளவும் தேர்ச்சி பெற்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/113&oldid=1111484" இலிருந்து மீள்விக்கப்பட்டது