உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் வழி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

55


வற்புறுத்துவதற்காகவே நிற்க’ என்றார். நிற்றல் என்றால் நிலையாய் நிற்றல்தானே! இந்தக் காலத்தில் என்னவோ கட்டாயக் கல்வி - கட்டாயக் கல்வி (Compulsory Education) என்கிறார்களே - இந்தக் கட்டாயத்தை, ‘க’ எனும் விகுதி பெற்று விதித்தல் பொருளில் வந்துள்ள ‘கற்க - நிற்க’ என்னும் பொருளில் வியங்கோள் வினைமுற்றுக்கள் உணர்த்தி நிற்கும் நுண்பொருள் அழகினை நுனித்தறிந்து மகிழ்க! (வியங்கோள் வினைமுற்றைப் பற்றியும், அதன் விதித்தற் பொருளைப் பற்றியும் இலக்கண நூலுள்கண்டு தெளிக).

மேலும், இந்தக் குறளில் இருபத்தேழு எழுத்துக்கள் உள்ளன. அவற்றுள் இருபத்துமூன்று எழுத்துக்கள் கடின ஓசையுடைய வல்லெழுத்துக்கள். இப்பொழுது இந்தக் குறளை இரண்டு மூன்றுமுறை படித்துப் பாருங்கள்? வள்ளுவர் எவ்வளவு ‘காரசார’ உணர்ச்சியுடன் கல்வியைக் கட்டாயப்படுத்தியுள்ளார்! எவ்வளவு வல்லோசையுடன் வற்புறுத்தியுள்ளார்!. அவர் வல்லெழுத்துக்களை மிகுதியாகச் சேர்க்கவேண்டும் என்று எண்ணியா சேர்த்தார்? இல்லை. அவரது உள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சியின் ஊற்றமானது, அவரையறியாது ஊற்றெடுத்து வெளிப்போந்துவிட்டது. இதுதான் இயற்கைப் புலவர்களின் இயல்பு. எனக்கு எப்படி இது தெரிந்தது? இந்தக் குறளைப் படித்ததுமே, இதற்கும் ஏனைய குறள்கட்கும் ஒலி வேற்றுமை விளங்கிவிட்டதே! இதற்காகத்தான், செய்யுட்களை யெல்லாம் நன்கு வாய்விட்டுப் படிக்க வேண்டும்; திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/57&oldid=1105686" இலிருந்து மீள்விக்கப்பட்டது