பக்கம்:வாழையடி வாழை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

வாழையடி வாழை


என்று கூறி, அவளே,

'கவிதை எனுமோர் பெண்தெய்வம்-அவள்
      கவிஞர் பரவும் அருந்தெய்வம்!
புவியை இயக்கும் புகழ்த்தெய்வம்-அவள்
      புலவர் தமக்குக் குலதெய்வம்!

என்று குறிப்பிட்டு, அக்கவிதை எனும் பெண் தெய்வத்தினைக் கைகுவித்து வணங்குகிறார் கவிஞர்.

'இதயக் கூண்டில் ஒரு பறவை' என்ற பாட்டு’ நெஞ்சை உலுக்கி உருக்குகின்றது:

'உள்ளச் சிறையில் ஒரு கன்னி-அவள்
      ஊழிக் காலம் தவமிருந்தாள்
உள்ளச் சிறையில் ஒரு கன்னி!’

என்று தொடங்கும கவிதை 'மனமென்னும் கன்னி’ உள்ளச் சிறையில் ஊழிக்காலம் நின்று தவம் செய்யும் நேர்த்தியைச் சித்திரிக்கின்றது!

'அல்லும் பகலும் உனதெண்ணம்
      அகிலம் அனைத்தும் உனதுருவம்;
சொல்லும் செயலும் உனையன்றிச்
      சூழ்நிலை வேறெதும் கண்டறியேன்!’

என்னும் கவிதையின் கருத்தாழம் வியப்பூட்டு வதாயுளது.

"மறுமலர்ச்சிச் சோலையில் பூத்த மனோரஞ்சிதம் இளவேனில்" என்ற யோகி சுத்தானந்த பாரதியார்' பாராட்டும்; "எளிய சொற்களே உள்ளன; ஆனால் எத்தனையோ ஆற்றல் வாய்ந்தன,"என்ற பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் பாராட்டும், "எல்லாமே பொதுவாக எளிய இனிய கடையில் ஒழுகும் இனிய பண்நலமும் உவகை வளர்க்கும் கவி வளமும் கொண்டமைந்துள்ளன" என்ற 'நாவலர் டாக்டர் சோமசுந்தர பாரதியார்' பாராட்டும்"; "இந்தப் பாட்டுகள் கவிதையிலே ஒரு புதிய துறையை இயற்றுகின்றன" என்ற 'புதுமைப்பித்தன்' பாராட்டும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/168&oldid=1337997" இலிருந்து மீள்விக்கப்பட்டது