பக்கம்:வாழையடி வாழை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. 'வாழையடி வாழை'

"காலத்தின் இடையிடையே கவிஞர்கள் தோன்றுவார்கள்," என்கிறார், கவிஞர் 'ஷெல்லி.' இக்கூற்றானது தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் பேருண்மையாகத் துலங்குகின்றது. தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிஞர் பலரை நாம் நல்ல ஞானியராகவும் காண இயலும். 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று உலக ஒருமைப் பாட்டினைக் கூறிய புறநானூற்றுப் புலவர் 'பூங்குன்றனார்', 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்ற நன்னெறியினைத் துலக்கமுறக் கூறிய தவ ஞானியராம் 'திருமூலர்’, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று தொண்டுள்ளத்தினை வளர்த்த 'திருநாவுக்கரசர்', 'அழுதால் உன்னைப் பெறலாமே' என்று ஆண்டவனிடம் கற்றாவின் மனம் போலக் கசிந்துருகிய 'மாணிக்க வாசகர்', 'எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே' என்ற தாயுமான தயாபரர் முதலான சான்றோர்கள், ஆன்மநேய ஒருமைப்பாட்டினை வளர்த்த சீலர்கள் ஆவார்கள். இத்தகு கீர்த்திமிக்க, வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தின் மரபில் வந்தவர்கள், வடலூர் அருட்சோதி இராமலிங்க அடிகள்.

உலகில் எண்ணற்ற உயிர்கள் தோன்றுகின்றன; உணவு உண்டு உயிர்க்கின்றன; உரிய நாளில் மறைகின்றன. தோற்றமும் ஒடுக்கமும் ஆகவே பெரும் பாலார்தம் பிறவிகள் அமைந்து விடுகின்றன. இவ்வாறு நீரில் இட்ட கோடுபோன்று அவர்கள் வாழ்வு உடனடியாக மறைந்துவிடுகின்றது. ஒரு சிலரே தம் வாழ்வில் ஒளி விளக்காயும், வழி காட்டியாயும் விளங்கி, உலகைச் சீர்திருத்தி உயர்வடையச் செய்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/22&oldid=1461212" இலிருந்து மீள்விக்கப்பட்டது