பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் f67 'கலைஞன் மாசிலாமணி ஒரு சமயம் சொன்னார் - நீங்களும் உங்களைப் போன்றவர்களும் ஆழ்ந்த இலக்கியங்களை, சிந்தனை நூல்களை வெளியிட வேண்டும் என்று சொல்கிறீர்கள். நானும் அதுமாதிரியான புத்தகங்களைத்தான் வெளியிடுகிறேன். எழுத்தாளர்கள் எல்லாம் வியந்து பாராட்டுகிற எழுத்தாளரான லா.ச. ராமாமிர்தம் சிறுகதைகளைப் புத்தகங்களாக வெளியிட்டு அடுக்கியிருக்கிறேன். விலையும் அதிகம் இல்லை. மூன்றரை ரூபாய், நான்கு ரூபாய் என்று குறைவான விலைதான். ஆனாலும் யாரும் வந்து அவற்றை வாங்கக் காணோம். லா.ச.ரா. புத்தகம் வாரத்துக்கு ஒன்றுமாசத்துக்கு ஒன்று கூட விற்பனையாகவில்லை. ஆனால், பாருங்க. வானதி பதிப்பகம் சாண்டில்யனின் கடல் புறா நாவலை மூன்று பாகங்களாக வெளியிட்டிருக்கிறது. ஒரு பாகம் விலை பதினைந்து ரூபாய். மூன்று பாகங்கள் நாற்பத்தைந்து ரூபாய் காலேஜ் மாணவிகள் தேடி வந்து வாங்கிப் போகிறார்கள். இன்று மட்டும் மூன்று செட் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். நான் இதைப் பொறாமைப்பட்டுச் சொல்லவில்லை. தமிழ்நாட்டு வாசகர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று தெரியப்படுத்துவதற்காகச் சொல்கிறேன். ஆனாலும், கலைஞன் பதிப்பகம் புதுமையான இலக்கிய முயற்சிகளை வெளியிடுவதை நிறுத்திவிடவில்லை. மாசிலாமணி படித்து ரசித்த நல்ல எழுத்துக்களை, மற்றவர்களும் படித்து மகிழ வேண்டும் என்ற எண்ணத்தோடு, புதுமையான எழுத்துக்களை விரும்பிப் புத்தகங்களாக வெளியிட்டுக் கொண்டுதான் இருந்தார். 'சரஸ்வதியில் உதிரிப்பூக்கள் என்ற தலைப்பில், இதழ்தோறும் நான் சுவையான, ரசமான, விஷயங்களை எழுதிக்கொண்டிருந்தேன். நான் படித்த புத்தகங்களில் நயமான சங்கதிகள், வித்தியாசமான புத்தகங்கள், உலகத்து இலக்கிய சமாச்சாரங்கள், எழுத்தாளர்களின் விந்தைப் பண்புகள் பற்றி எல்லாம் எழுதினேன். எழுத்தாளர்களும் இலக்கிய ரசிகர்களும் விரும்பிப் படித்த பகுதி அது. மாசிலாமணியும் அவற்றைப் படித்து ரசித்திருக்கிறார். அவற்றில் தேர்ந்து தொகுத்த சில பகுதிகளைப் புத்தகமாக வெளியிட ஆசைப்பட்டு என்னை அணுகினார். மகிழ்ச்சியுடன் இசைந்தேன். முக்கியமான சில உதிரிப்பூக்கள் தொகுக்கப்பட்டு, 'முத்துக்குளிப்பு என்ற பெயரில் கலைஞன் பதிப்பக வெளியீடாக வந்தது. சரஸ்வதியில் வந்தவற்றில் கால்வாசி தான் அவை, ஏனையவை புத்தகமாகவில்லை, திருச்சியிலிருந்து வந்துகொண்டிருந்த திருலோக சீதாராமின் சிவாஜி வார இதழில் நான் சிறுகதை, கட்டுரை, கவிதை என்று நிறையவே எழுதினேன். மூடுபனி, காகித ரோஜா எனும் இரண்டு நாவல்கள் தொடர்கதைகளாகப் பிரசுரமாயின.