பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வாழ்க்கைச் சுவடுகள் ஊர்வலங்களிலும், கூட்டங்கள் ஆரம்பத்திலும் பாரதியார் பாடல்களை உணர்ச்சிகரமாகப் பாடுவார்கள் தொண்டர்கள். பத்திரிகைகளும், பாரதி பாடல்களை அச்சிட்டு வந்தன. இந்த விதமாக, பாரதி பாடல்களில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நாட்டுப் பற்று உண்டாக்குவதற்காகத் தேசீயத் தலைவர்கள் வரலாறு போராட்ட வீரர்கள் சரிதை முதலியவற்றைச் சிறு சிறு வெளியீடுகளாக அச்சிட்டு ஒரனா விலையில் விற்றார்கள். பெரும்பாலானவை எம்.எஸ். கப்பிரமணிய ஐயரால் எழுதப்பட்டவை. உணர்ச்சி செறிந்த நடையில், விறு விறுப்பான முறையில் அவற்றை அவர் எழுதினார். மாணவர்களிடையே அவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இவற்றால் எல்லாம் உந்தப்பெற்று. சில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்து விடுவதும் நடந்தது. என் அண்ணனுடன் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன்-நடராஜன் என்று பெயர்-திடீரென்று ஒருநாள் காணாமல் போனான். மூன்று நாள்களுக்குப் பிறகு வந்து சேர்ந்தான். தன் அனுபவங்களைக் கதை போல் சொன்னான். துணிக்கடை மறியலைக் கண்டு கண்டு உணர்ச்சி பெற்ற அவன் நாமும் ஏன் மறியலில் ஈடுபடக் கூடாது என்று எண்ணினான். வேகத்தோடு இறங்கிவிட்டான். தொண்டர் குழுவில் சேர்ந்து அவனும் மறியல் செய்தான். போலீஸார் எல்லோரையும் பிடித்து லாரியில் ஏற்றிச் சென்றார்கள். வெகு துரம்" எடுத்துச் சென்று எங்கோ ஒரு காட்டுப் பிரதேசத்தில் தொண்டர்களை இறக்கி விட்டுவிட்டார்கள். அவர்களுக்குத் தடிஅடியும் கிடைத்தது. அப்படி விடப்பட்ட தொண்டர்கள் பசியோடு, பட்டினி கிடந்து நடந்து நடந்து ஊர் வந்து சேர்ந்தார்கள். நடராஜனும் அவ்வாறே வந்தான். தன் உடம்பில் பட்ட காயங்களைக் காட்டினான். இத்தகைய நிகழ்வுகள் என் உள்ளத்தில் நன்கு பதிவாகின. பிற்காலத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வீடும் வெளியும் என்ற நாவலை நான் எழுதுவதற்கு இவை பெரிதும் பயன்பட்டன. பக்கத்து வீட்டில் வசித்த ரங்கூன் பிள்ளை என்பவர் 'ஆனந்த விகடன்' இதழ்களை ஆரம்பம் முதல் வருடவாரியாகப் பைண்ட்' செய்து வைத்திருந்தார். அவற்றை எங்களுக்குப் படிக்கத் தந்தார். தொடர்ந்து வந்த புதிய இதழ்களை என் அண்ணனின் சக மாணவன் ஒருவன் தந்து உதவினான். படிப்பதற்குக் கதைப் புத்தகங்களும் பள்ளி நாட்களிலேயே கிடைத்தன. அந்நாட்களில் வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், வைமு கோதைநாயகி அம்மாள். ஜே.ஆர். ரங்கராஜூ ஆகியோரின் நாவல்கள் வாசகர்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன. நகரங்களிலும், கிராமங்களிலும் இருந்த படித்தவர்கள் இந்நாவல்களை விரும்பி வாசித்தார்கள்.